

திருப்பூர்: தைப் பூசத் திருவிழா நாளன்று, தமிழகத்தில் கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், திண்டுக்கல் மாவட்டம் பழநி நோக்கி படையெடுப்பது வழக்கம்.
வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், பாதயாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு போதிய வசதிகளை செய்து தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்புத் தலைவர் ஆ.அண்ணாதுரை கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் ஆண்டுதோறும் பழநிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம்.
பல்லடத்தில் இருந்து தாராபுரம் வழியாக பழநி நோக்கி செல்வார்கள். பல்லடத்தில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் 6 வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பாதயாத்திரை பக்தர்கள் செல்வது சிரமம். எனவே, பக்தர்களின் வசதிக்கு ஏற்ப, 5 நாட்களுக்கு மட்டும் அவிநாசிபாளையம் வழியாக வாகனங்களை திருப்பிவிட வேண்டும்.
அதேபோல பல்லடம் - குண்டடம் வரை சாலையோரம் இருமருங்கிலும் முட்கள், பாட்டில்கள் அதிகம் தென்படுகின்றன. அவற்றை சுத்தம் செய்துதர நெடுஞ்சாலைத் துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். வழிநெடுக குறிப்பிட்ட தூரத்தில், ஆங்காங்கே பக்தர்கள் தங்குவதற்கு தற்காலிக கூடாரங்கள், கூடுதல் கழிப்பிடங்கள், குடிநீர், போதிய விளக்கு வசதிகள், மருத்துவ வசதிகள், நடமாடும் மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பூச்சக்காடு பழநிமலை பாதயாத்திரைக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.எம்.முத்துரத்தினம் கூறியதாவது: ஆண்டுதோறும் சுமார் 350 பேர் வரை, பாதயாத்திரை மேற்கொள்வோம். கரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக செல்ல முடியவில்லை. தற்போது 27-ம் ஆண்டாக பாதயாத்திரை பயணம் மேற்கொள்ள உள்ளோம். பழநி மலையில் பாதயாத்திரை பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை.
போதிய கழிவறைகள் இல்லை. பக்தர்கள் கூட்ட நேரங்களில் சுவாமியை வழிபட எளிதாக சென்றுவர போதிய ஏற்பாடுகள் இல்லை. எங்கள் குழுவே, கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கும் ஆண்டுதோறும் பாதயாத்திரை சென்று வருகிறது. சபரிமலையில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கையை கொண்டு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, முதியவர்களுக்கு தேவையான சுடுநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையும் பழநி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், என்றார்.