Published : 04 Jan 2023 04:10 AM
Last Updated : 04 Jan 2023 04:10 AM

அண்ணாமலை மிரட்டல் தமிழகத்தில் எடுபடாது: வேளாண் துறை அமைச்சர் கண்டனம்

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் | கோப்புப் படம்

தருமபுரி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மிரட்டல் தமிழகத்தில் எடுபடாது என்று தருமபுரியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் பஞ்சப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, பஞ்சப்பள்ளி அணையில் சின்னாறு உப வடிநில பகுதியில் உள்ள சின்னாறு அணை கால்வாய், கேசர்குளி அணை கால்வாய்கள், குமாரசெட்டி ஏரி மற்றும் 15 அணைக்கட்டுகளை புனரமைக்கும் பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும், பஞ்சப்பள்ளி அணை பகுதியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சிகளின் போது, மாவட்ட ஆட்சியர் சாந்தி, தருமபுரி எம்.பி செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியது: பஞ்சப்பள்ளி அணை, கேசர்குளி அணை கால்வாய்களை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேற உள்ளது. பஞ்சப்பள்ளி - சின்னாறு அணை பகுதியில் 11.2 கிலோ மீட்டர் நீளத்துக்கும், கேசர்குளி அணை பகுதியில் 14 கிலோ மீட்டர் நீளத்துக்கும் புனரமைப்பு பணி நடக்கவுள்ளது.

தருமபுரி மாவட்ட மக்களின் பல ஆண்டு கோரிக்கைகள் தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. பேசுவது எளிது, செயல்படுத்துவது கடினம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆங்காங்கே கூறப்படும் ஆதாரமற்ற தகவல்களை பெற்று பேசி வருகிறார். கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியபோது காவிரி நீரை தமிழகத்துக்கு தரவே கூடாது என்று பேசியவர் அவர்.

ஓர் இயக்கத்தின் தலைவராக இருப்பவர் பொறுப்புடன் பேச வேண்டும். நாங்கள் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். கடந்த திமுக ஆட்சியின்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின், ஜப்பான் சென்று நிதி பெற்றுவந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் புளூரைடு பாதிப்பு இல்லாத குடிநீரை பருக தேவையான திட்டத்தை கொண்டு வந்தார்.

ஆனால், அந்த திட்டத்தை அண்ணாமலை குறைகூறுகிறார். பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு அந்த திட்டம் பற்றி நன்றாக தெரியும். அண்ணாமலை நினைத்ததை எல்லாம் பேசக்கூடாது. அவர் பாணியே மிரட்டல் பாணி. மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள அதிகாரிகளை மிரட்டும் வகையில் அவர் பேசி வருகிறார். அவருடைய மிரட்டல் இங்கு எடுபடாது. இவ்வாறு கூறினார். தருமபுரி மாவட்ட மக்களின் பல ஆண்டு கோரிக்கைகள் தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x