

சென்னை: மயிலாப்பூரில் உள்ள வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பணம் இருந்த லாக்கர் சேதமின்றி தப்பித்தது. சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொதுத் துறை வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. தரைதளத்தில் இயங்கி வந்த வங்கியில் இருந்து நேற்று அதிகாலை திடீரென கரும்புகை வெளியேறியது. அதைத் தொடர்ந்து தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலாளி, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து மயிலாப்பூர், திருவல்லிக்கேணி மற்றும் அசோக் நகர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ விபத்து குறித்து மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடக்கிறது.
இந்த தீ விபத்தில் வங்கியில் இருந்த ஏசி, மரச் சாமான்கள்,ஆவணங்கள் மற்றும் கணிணி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்ததாகவும், பணம் இருந்தலாக்கர் சேதமின்றி தப்பியதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். அதிகாலை நேரம் என்பதால்,வங்கியில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.