

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக வரும் வெளியூர் பார்வையாளர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இடநெருக்கடி யால் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதைத் தவிர்க்க ஜல்லிக்கட்டு மைதானம் கட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பிரசித்தி பெற்றவை. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண தமிழகம் முழுவதும் இருந்து பார்வையாளர்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வருகின்றனர். அவர்களை சுற்றுலாத் துறையினர் போட்டி நடக்கும் நாளில் அலங்காநல்லூர் அழைத்துச் செல்வர்.
வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்காகவே அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே தற்காலிகமாக கேலரி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கும் நாளில் இந்த கேலரியில் 50 சதவீதம் பேருக்கு மேல் விஐபிகள், அரசியல்வாதிகள், அவரது குடும்பத்தினர், உயர் அதிகாரிகள் குடும்பத்தினர் அமர்ந்திருப்பார்கள்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் சுற்றுலாத் துறையினர், அவர்க ளுக்கென்றே அமைக்கப்பட்ட கேலரியில் அமர வைக்க முடியாமல் சிரமப்படுவார்கள். கடந்த ஆண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் போட்டியைக் கண்டு களிக்க முடியாமல் சுற்றுலாத் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் பலர் விரக்தியில் போட்டியைப் பார்க்காமலே திரும்பிச் சென்றனர். இப்படி ஒவ்வொரு ஜல்லிக்கட்டுப் போட்டியிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சந்திக்கும் கசப்பான அனுபவத்தால் மறுமுறை அவர்கள் வருவதில்லை. அதனால், பொங்கல் நேரத்தில் மதுரை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
மேலும், வாடிவாசலின் இரு புறமும் அமைக்கப்படும் பார்வையாளர்கள் கேலரியிலும் ஜல்லிக்கட்டு கமிட்டி டோக்கன் கொடுக்கும் அரசியல் வாதிகள் குடும்பத்தினருக்கும், உள்ளூர் பார்வையாளர்களுக்கும், அரசு அதிகாரிகள் குடும்பத்தினருக்கும் மட்டுமே முக்கியத்தும் கொடுக்கப்படுகிறது.
இந்தப் போட்டியைக் காண தமிழகம் முழுவதும் இருந்து வரும் பார்வையாளர்கள் பலர் கையில் டோக்கன் பெற்று வந்தாலும் அவர்களால் இந்த கேலரியில் ஏறி இடம் பிடிக்க முடிவதில்லை. ஏனென்றால் மறுநாள் நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க வேண்டுமென்றால் பார்வையாளர்கள் முந்தைய நாள் இரவே வந்து கேலரியில் இடம்பிடிக்க வேண்டும்.
அப்படி இடம்பிடிக்காத பட்சத்தில் உள்ளூர் மக்கள் அந்த இடத்தில் அமர்ந்து விடுகின்றனர். அவர்களை ஜல்லிக்கட்டு கமிட்டியோ, போலீஸாரே கீழே இறங்க வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் காலை 7 மணிக்குள் கேலரி நிரம்பி விடுவதால் அதற்கு மேல் டோக்கனோடு பார்வையாளர்கள் வந்தாலும் போலீஸார் அனுமதிப்பதே இல்லை. அதனால், வெளியூர் பார்வையாளர்கள் இந்த போட்டியை கண்டு களிப்பது குதிரைக் கொம்பாகிவிடுகிறது.
இதற்கிடையே, ஜல்லிக்கட்டுப்போட்டியை கண்டு களிக்க மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் வயித்துமலை அடிவாரத்தில் உலக ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் எ. வ. வேலு, மைதானம் அமைக்க 16 ஏக்கர் தேவைப்படுவதாகவும், திட்ட மதிப்பீடு தயார் செய்து 2024-ம் ஆண்டுக்குள் இந்த இடத்தில் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்து இருந்தார்.
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பிரபலப்படுத்த உலக கின்னஸ் சாதனைகைள குறி வைத்து அதிகமான பார்வையாளர்களை அனுமதித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் மதுரை மாவட்டம், அந்த இடத்தை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும்.
அதற்கு தற்போது அலங்காநல்லூர் அருகே அமைக்க திட்டமிட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் திட்டத்தை விரைந்து செயல்படுத்த உள்ளூர் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு என்று வரலாற்றில் இடம் பிடித்துவிட்ட அலங்காநல்லூரில் போட்டியை வெளியூர் பார்வையாளர்களும் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.