

பழநி: குரூப்-2 மெயின் தேர்வை 2 நாட்கள் நடத்த தேர்வாணையம் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 நேர்முக தேர்வு மற்றும் நேர்முக தேர்வு இல்லாத தேர்வுக்கான முதல் நிலை தேர்வை 2022 மே.21-ம் தேதி நடத்தியது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த நவ.8-ம் தேதி வெளியிடப்பட்டன. இதற்கான மெயின் தேர்வுக்கு 54,000 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு பிப்.25-ம் தேதி மெயின் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு பொது தமிழ், பொது அறிவு என 2 தாள்களை கொண்டது.
கிராம மாணவர்கள் சிரமம்: இந்த 2 தாள்களும் ஒரே நாளில் நடைபெறுகிறது. இந்த தேர்வை விரிவாக எழுத வேண்டி இருக்கும். ஒரே நாளில் காலையில் 100 மதிப்பெண்களுக்கும், மாலையில் 300 மதிப்பெண்களுக்கும் விரிவாக விடையளிப்பது தேர்வர்களுக்கு கடினமானதாகும். பொதுவாக கொள்குறி வகை தேர்வாக இருந்தால் காலை, மாலை என இரு வேளைகளிலும் எழுதலாம்.
ஆனால், விரிவாக விடையளிக்கும் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் மிகவும் சிரமப்பட வாய்ப்புள்ளது. எனவே, குரூப்-2 மெயின் தேர்வு தாள்களை 2 நாட்கள் நடத்த தேர்வாணையம் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மைய இயக்குநர் ராமமூர்த்தி கூறியதாவது: மெயின் தேர்வுகள் உள்ள தேர்வுகள் அனைத்தும் ஒரு நாளில் ஒரு தேர்வு நடத்துவது தான் வழக்கமாக உள்ளது. குரூப்-1 முதல் நிலை தேர்வுகளும், யுபிஎஸ்சி மெயின் தேர்வுகளும் ஒரு நாளில் ஒரு தேர்வு மட்டுமே நடத்தும்முறை பின்பற்றப்படுகிறது. தேர்வர்களின் நலன் கருதி குரூப்-2 மெயின் தேர்வை 2 நாட்கள் நடத்துவதற்கு தேர்வாணையம் முன்வர வேண்டும், என்றார்.