Last Updated : 27 Dec, 2016 12:45 PM

 

Published : 27 Dec 2016 12:45 PM
Last Updated : 27 Dec 2016 12:45 PM

நொய்யல் இன்று 15: மழையால் வெள்ளம் வந்தாலும் குளத்துக்கு தண்ணீர் வரவில்லை!

பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்...

*

சாக்கடையாக மாறிய கோவை பெரியகுளத்தை தூர் வாரும் முயற்சியில் 3 ஆண்டுகளுக்கு முன் சிறுதுளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அமைப்புகளுடன் களமிறங்கினர் பொதுமக்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இப்பணிக்கு பல்லாயிரக்கணக்கானோர் தன்னிச்சையாக திரண்டனர்.

குளம் தூர் வாரப்பட்ட நிலையில் மழை பெய்து, நொய்யலில் தண்ணீரும் வந்தது. அங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோயமுத்தூர் அணைக்கட்டு வாய்க்காலையும் திறந்துவிட்டனர் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.

குளத்துக்கு வரும் தண்ணீரை பூஜை செய்து வரவேற்க, கற்பூரம், பூ, பழத்துடன் தயாராக இருந்தார்கள் கோவை பிரமுகர்கள். ஆனால், குளத்துக்கு தண்ணீர் வரவேயில்லை.

இதையடுத்து, தண்ணீர் வரும் வாய்க்கால் கரையிலேயே நடந்துசென்று பார்த்தபோது, குளத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செல்வபுரம் பகுதியில், வாய்க்கால் தழும்பி சாக்கடையில் தண்ணீர் செல்வது தெரியவந்தது. வாய்க்கால் பாதை முழுவதுமாக மண்ணால் மூடப்பட்டு, சிமென்ட் தளம் அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் இருந்த விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாறிவிட்டன.

வாய்க்காலில் வெள்ளம் வந்தால் ஊருக்குள் புகுந்துவிடும் என்பதால், ஏற்கெனவே அந்த வாய்க்காலில் உபரிநீர் போக்கிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், குடியிருப்புவாசிகள் அகற்றைக் காணாமல்போகச் செய்துவிட்டனர். வாய்க்கால் பாதையைத் திருப்பி, அருகில் இருந்த பெரிய சாக்கடையில் தண்ணீர் செல்லும்படி செய்துவிட்டனர்.

இதையடுத்து, வாய்க்கால் பாதையை மீண்டும் பழையபடி அமைக்க முயன்றபோது, “குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துவிடும்” என்றுகூறி, அதற்கு அப்பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு தரப்பும் போராட்டம் நடத்தும் அளவுக்கு பிரச்சினை முற்றியது.

பின்னர், ஒரு அரசியல் பிரமுகர் தலையிட்டு, வெள்ளத்தின்போது வாய்க்காலில் வரும் நீர் குடியிருப்புகளுக்குள் புகாமல், வாய்க்காலிலேயே செல்லும் வகையில் பெரிய குழாய்களை சொந்த செலவில் அமைத்துக்கொடுத்தார். பின்னர், சில நாட்கள் கழித்தே வாய்க்கால் நீர் குளத்துக்கு வந்தது. ஆனால், வெள்ளம் வடிந்துவிட்டது. குளத்தில் வழக்கம்போல நகரின் சாக்கடைக் கழிவுநீர் வந்தது.

சாக்கடையும், ஆலைக் கழிவுகளும்

பூசாரிபாளையம் வாய்க்கால், புட்டுவிக்கி நொய்யல் ஆகியவை பெரிய குளத்துடன் பிணைந்திருப்பவை. இவ்வாறு, கோவை நகரில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் சாக்கடைகளோடும், ஆலைக் கழிவுகளோடும்தான் இணைந்துள்ளன.

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட 32 அணைக்கட்டுகள், 40-க்கும் மேற்பட்ட குளங்கள், நூற்றுக்கணக்கான வாய்க்கால்களின் நிலையும் இதுதான். பெரும்பான்மையான நீர்நிலைகள் பெரிய குளத்தைவிட மோசமான நிலையில் உள்ளன.

நொய்யலின் முதல் அணைக்கட்டான சித்திரைச்சாவடி வாய்க்காலில் தண்ணீர் வந்தால், கோவையில் உள்ள புதுக்குளம், கோளராம்பதி குளம், நரசாம்பதி குளம், கிருஷ்ணாம்பதி குளம், செல்வாம்பதி குளம், குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம் ஆகியவை நிரம்ப வேண்டும். ஆனால், சித்திரைச்சாவடி அணைக்கட்டு மண்மேடாகிவிட்டது. 7 குளங்களிலும் ஆகாயத்தாமரை, கருவேல மரங்கள் பரவியுள்ளன. நகரின் சாக்கடைகள் அவற்றில்தான் கலக்கின்றன. கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி குளத்தில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவதால், அவை சுருங்கிவிட்டன.

இவற்றைக் கடந்து வரும் தண்ணீர், குனியமுத்தூர் அணைக்கட்டு கால்வாயில் 12.5 கிலோமீட்டர் சென்று, சொட்டையாண்டிக் குட்டை, காஞ்சிநாராயண சமுத்திரம், பேரூர் பெரிய ஏரி, குனியமுத்தூர் சின்னேரி, குனியமுத்தூர் செங்குளத்தை நிரப்ப வேண்டும். இவற்றின் வாய்க்கால், மதகுகள் 90 சதவீதம் பழுதடைந்தும், புதர்க்காடாகவுமே காட்சியளிக்கின்றன.

அதேபோல, தேவி சிறை எனப்படும் கோயமுத்தூர் அணைக்கட்டும் மண்மேடாகி, அங்கிருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவு செல்லும் வாய்க்கால், வழியோரக் குடியிருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இதற்கான வாய்க்கால் இடிக்கப்பட்டு சாலை பாலம் பணிகள் நடக்கின்றன. இதன் நீர்ப் போக்கிகள், மணல் போக்கிகள், கதவுகள் குறித்தெல்லாம் அதிகாரிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளாலாமல் பணிகளைத் தொடர்கின்றனர் என்பது அதிர்வுக்குரிய தகவல். இதனால், பெரியகுளத்துக்கு இனிமேல் தடையின்றி தண்ணீர் வருவது சந்தேகமே என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

சாக்கடை நீரால் நிரம்பும் பெரியகுளம், இணைப்புக் குளமான வாலாங்குளத்தையும் நாசமாக்குகிறது. அங்கு சாக்கடையை அகற்றுவதே மாநகராட்சியின் 15 ஆண்டுகால பணியாக உள்ளது. இந்தக் குளக்கரையின் பாதி பகுதியை மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

அடுத்துள்ள குறிச்சி அணைக்கட்டின் மதகுகள், வாய்க்கால்கள் ஓரளவுக்குப் பராமரிக்கப்பட்டுள்ளன. ஆனால், குறிச்சிக் குளம் நெடுஞ்சாலையால் துண்டாடப்பட்டு உள்ளது. ஒரு பகுதியில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

அணை திறப்பில் சிக்கல்

வெள்ளலூர் அணைப் பகுதியை ஆக்கிரமித்து 500 வீடுகளும், வாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து 1,000 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. அதனால் 15 ஆண்டுகளாக அணை திறப்பதில் பிரச்சினை உள்ளது. குடிசை மாற்று வாரியம் கட்டியுள்ள வீடுகளை அவர்களுக்கு ஒதுக்கி, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெள்ளலூர் குளம் வறண்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,000 அடி முதல் 1,300 அடி வரை ஆழ்குழாய்க் கிணறு அமைத்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.

சிங்காநல்லூர், ஒட்டர்பாளையம் அணைக்கட்டுகளில், தெலுங்குபாளையம், செல்வபுரத்தில் உள்ள சாய, சலவைப் பட்டறைகளின் ரசாயனக் கழிவுநீரால் மாசடைந்துள்ளன. இருகூர் அணைக்கட்டு மற்றும் குளத்தின் நிலையும் மிகவும் மோசம்.

சூலூர் அணைக்கட்டும், அதைச் சார்ந்த 2 குளங்களும் ஓரளவுக்கு தூய்மையாக உள்ளன. அதற்குப் பிறகு உள்ள நீர்நிலைகள் பெரும்பாலும் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சோமனூர், மங்கலம், திருப்பூருக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான சாய, சலவைப் பட்டறைகளால் நொய்யல் பாழாகிறது.

நொய்யலில் 32 அணைகள், 40-க்கும் மேற்பட்ட குளங்கள் இருப்பதாக ஆவணங்கள், கல்வெட்டுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த அளவுக்கு தற்போது அணைகளோ, குளங்களோ இல்லை.

நீலி அணைக்கட்டு முதல் திருப்பூர் மண்ணரை வரை 22 அணைக்கட்டுகளும், 27 குளங்களும் உள்ளதாக கோவை பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர். ஆண்டிபாளையம், திருப்பூர் அணைக்கட்டுகள் பயனற்றுப் போனதாக பொதுப்பணித் துறை ஆவணங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்ணரைக்கு அடுத்து மூன்று அணைக்கட்டுகள், குளங்கள் ஆகியவை ஈரோடு பொதுப்பணித் துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளன. அவை மூன்றும் சாயக்கழிவுகளால் நிரம்பி பயனற்று உள்ளன என்று அதிகாரிகளே தெரிவிக்கிறார்கள்.

இது தொர்பாக பொதுப்பணித் துறை ஓய்வுபெற்ற பொறியாளர் திருநாவுக்கரசு கூறும்போது, “தமிழகத்தில் உள்ள ஆறுகளை மையப்படுத்திக் கட்டப்படும் அணைகளை வளைவாக கட்டியிருப்பார்கள். அப்போது அதிக அளவு தண்ணீரைத் தேக்க முடியும். வெள்ளம் வந்தால் எளிதில் வழிந்தோடும். ஆனால், நொய்யலைப் பொறுத்தவரை ஆற்றின் நேர் குறுக்காகவே அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதிக வெள்ளம் வராது என்பதும், சரிவாகவும், குதித்தோடும் வகையிலும் ஆறு, வாய்க்கால்கள் இருப்பதும் இதற்கு காரணம்.

இதையொட்டியே அந்தக் காலத்தில் அணையின் மதகுகள், கதவுகள், திறப்பான்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வெள்ளக்காலங்களில் கதவுகளை திறக்க, மூட, கட்டைக் கம்பி போடும் முறை இருந்தது. ஆனால், இப்போதுள்ளவர்களுக்கு இது தெரியவில்லை. கதவைத் திறக்க, மூடுவதற்கு ‘ஸ்குரூ ராடு’ பயன்படுத்துகின்றனர். அவை பல இடங்களில் திருடப்படுகின்றன. இருப்பதையும் முறையாகப் பராமரிப்பதில்லை. வெள்ளக் காலங்களில் கதவுகளைத் திறக்க முடியாமல், சம்மட்டியால் அடிக்கிறார்கள். அப்போது அது உடைந்துவிடுகிறது.

வாய்க்கால், ஆற்றில் வெள்ளத்தின் வேகத்தை குறிப்பிட்ட காலஇடைவெளிகளில் முன்பு கணக்கெடுத்தனர். அதற்கேற்ப வாய்க்கால்களில் குறிப்பிட்ட தொலைவில் நீர்ப்போக்கிகள், தேவைப்படும் அணைக்கட்டுகளில் மணல்போக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை யாரும் தற்போது பயன்படுத்துவதில்லை. பல இடங்களில் அவை அழிந்தும்விட்டன. சித்திரைச்சாவடி, கோயமுத்தூர் அணைக்கட்டில் உள்ள மணல்போக்கிகளை அவ்வப்போது திறந்து, மண்ணை வெளியேற்றியிருந்தால் அந்த அணையே மண்மேடாகி இருக்காது. எனவே, இதுகுறித்து ஆய்வுசெய்து, சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், நொய்யலை சரிப்படுத்தவே முடியாது என்றார்.

பயணிக்கும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x