

உதகை நகராட்சியில் விரைவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமலுக்கு வர இருப்பதால், குப்பையை வீடுகளிலேயே தரம் பிரிக்க நகராட்சி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகை நகரில் நாளொன்றுக்கு சேகரமாகும் 30 டன் கழிவுகளை முறையாக அகற்றும் வகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.3.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குப்பை தரம் பிரிக்கப்பட்டு, காந்தல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள இயந்திரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் துகள்களாக வெட்டப்படும். திடக்கழிவுகள், தீட்டுக்கல்லில் உள்ள குப்பைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மண்புழு உரம் தயாரிக்கப்படும்.
இந்நிலையில், வீடுகளிலேயே குப்பையை தரம் பிரிப்பது குறித்து, நகராட்சி மூலமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
கட்டுமானப் பணி
இதுதொடர்பாக உதகை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வி.ஏ.பிரபாகரன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.3.9 கோடி மதிப்பில் உதகை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மகளிர் சுயஉதவிக் குழுவினர் மூலமாக பிளாஸ்டிக் கழிவுகள் பிரிக்கப்பட்டு, துகள்களாக வெட்டப்படும். அதற்கான இயந்திரம் நிறுவப்பட்டு, இந்த வாரம் முதல் செயல்பாட்டுக்கு வரும்.
பிற கழிவுகள் மூலமாக, தீட்டுக்கல்லில் உள்ள குப்பைத் தளத்தில் மண்புழு உரம் தயாரிக்கப்படும். இதற்கான கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இயந்திரங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தரம் பிரிக்க
இந்நிலையில், வீடுகளிலேயே குப்பையை தரம் பிரிக்க, பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறோம். இதற்காக, ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு பைகள் வழங்கப்படும்.
அதில் மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து போடவும், பாலிதீன் பைகள், எண்ணெய் மற்றும் பால் பாக்கெட்டுகளை தனியாக சேகரிக்கவும் வலியுறுத்தி வருகிறோம்.
தரம் பிரிக்கப்பட்ட கழிவுகள், நகராட்சி மூலமாக சேகரிக்கப்படும். வீடு, வீடாகச் சென்று குப்பை சேகரிக்க, 10 ஆட்டோக்கள் மற்றும் தள்ளு வண்டிகள் வாங்கப்பட்டுள்ளன. மேலும், குப்பையை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன” என்றார்.