பேரவை குழுக்களை அமைக்க காலம் தாழ்த்தினால் நீதிமன்றம் செல்வோம்: ஆளுநரை சந்தித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல்

பேரவை குழுக்களை அமைக்க காலம் தாழ்த்தினால் நீதிமன்றம் செல்வோம்: ஆளுநரை சந்தித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல்
Updated on
2 min read

சட்டப்பேரவை குழுக்களை அமைக்க காலம் தாழ்த்தினால் நீதி மன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிதிக் குழு உள்ளிட்ட குழுக்களை அமைக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை யில், திமுக எம்எல்ஏக்கள் துரை முருகன், ஏ.வ.வேலு, மா.சுப்பிர மணியன், பொன்முடி, சக்கரபாணி ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் அதன் சட்டப்பேரவை கட்சித் தலை வர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ முகமது அபுபக்கர் ஆகியோரும் சந்தித்து மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்ப தாவது:

தமிழக சட்டப்பேரவை விதி களின்படி, பொதுக்கணக்குக்குழு, பேரவை விதிகள் குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு, நூலகக் குழு உள்ளிட்ட 12 குழுக்கள் அமைக் கப்பட வேண்டும். இக்குழுக் கள் மூலம் பேரவை நம்பகத் தன்மையுடனும், சிறப்பாகவும் செயல்பட முடியும்.

வழக்கமாக புதிய பேரவை அமைக்கப்பட்டு, முதல் கூட்டம் தொடங்கிய 15 நாட்களுக்குள் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த 15-வது பேரவை மே மாதம் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த 5 மாதங்களாக பேரவைத் தலைவர் எந்த குழுவையும் அமைக்கவில்லை.

வழக்கமாக இந்த குழுக்கள் அமைக்கப்பட்டு ஓர் ஆண்டு செயல் படும். அதன் பின், ஒவ்வொரு நிதி யாண்டின் போதும் மாற்றி அமைக் கப்படும். பேரவை விதிகளின்படி எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப் பினரை பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக பேரவைத் தலைவர் நியமிக்க வேண்டும். மேலும், ஒவ் வொரு கட்சியின் சார்பிலும் தேர் வாகியுள்ள உறுப்பினர்கள் எண் ணிக்கை அடிப்படையில் குழு உறுப் பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

திமுகவில் 89 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால், குழுக்களில் அதிகளவு திமுக உறுப்பினர்களை நியமிக்க வேண்டி வரும். எனவே தான், ஆளுங்கட்சியின் அழுத்தத் தால் பேரவைக் குழுக்களை அமைக்காமல் பேரவைத் தலைவர் காலம் தாழ்த்தி வருகிறார்.

இது தொடர்பாக, பேரவையில் செப்டம்பர் 1-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். பேரவை இறுதி நாளான செப்டம்பர் 2-ம் தேதி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், குழுக்கள் அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது, பேரவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, ‘விரைவில் அமைக்கப் படும்’ என தெரிவித்தார்.

தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வத்தை திமுக எம்எல்ஏக்கள் சந்தித்து, குழுக்கள் அமைப்பது தொடர்பாக மனு அளித்தனர். அதன் பின்னும் இதுவரை அமைக்கப்படவில்லை. குழுக்களை அமைக்காமல், பேரவை விதிகளை பேரவைத் தலைவரே மீறி வருகிறார். பேரவைத் தலைவர் பேரவையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர். அவையின் விதிகளின்படி தனது பணியை செய்து, ஜனநாயக மரபுகளை காப்பாற்ற வேண்டும். ஆனால், அவர் இதுவரை விதிகளின் படி குழுக்களை அமைக்கவில்லை. எனவே தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, விரைவாக குழுக்களை அமைக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் கூறப் பட்டுள்ளது.

சந்திப்பு முடிந்த பின் நிருபர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் போது, ‘‘12 குழுக்களையும் அமைக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளோம். அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. பேரவைத் தலைவர் குழுக்களை அமைக்க மேலும் காலம் தாழ்த்தினால், நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in