

சேலம்: கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் சேலத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், செவிலியர்கள் 2-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா தொற்றுப் பரவலின்போது, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் டிசம்பர் 31-ம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஒப்பந்த செவிலியர்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்டு, தங்களுக்கு நிரந்தர பணி வழங்கக்கோரி, நேற்று முன்தினம் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினார்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் 103 பேரை, போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில், திருச்சி, தருமபுரி, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று காலையில் ஒப்பந்த செவிலியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். அவர்களிடம் போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், பணி நிரந்தரம் வழங்கி அரசு உத்தரவு பிறப்பிக்கும் வரை, போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றுகூறி, செவிலியர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். மேலும், திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ள செவிலியர்களை போலீஸார் விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதன்பின்னர் திருமண மண்டபத்தில் இருந்து செவிலியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் இணைந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து செவிலியர்கள் கூறியது: கரோனா தொற்று காலத்தில், மருத்துவப் பணிகள் தேர்வாணையம் மூலம் 3,200 செவிலியர்களை அரசு பணியில் அமர்த்தியது. 6 மாதங்களுக்கு மட்டுமே பணி என்றுகூறி, எங்களை பணிக்கு அமர்த்தினர். ஆனால், கரோனா அச்சுறுத்தல் நீடித்ததால், எங்களை தொடர்ந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தினர்.
எங்களைப் போலவே, மருத்துவப் பணிகள் தேர்வாணையம் மூலம் தேர்வான 950 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்துவிட்டனர். எங்களை தகுதி மதிப்பெண், இன சுழற்சி அடிப்படைகளில் தான் தேர்வு செய்தனர். நாங்கள் மாதம் ரூ.14,000 ஊதியத்தில் தான் பணியாற்றி வந்தோம். கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. கரோனா அச்சுறுத்தலுடன் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றிய எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.
இதனிடையே, போராட்டத்தில் உள்ள செவிலியர்களின் பிரதிநிதிகளை, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அழைத்து, சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். செவிலியர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். ஆனால், பணி நிரந்தரம் செய்து அரசு உத்தரவு பிறப்பிக்கும் வரை, காத்திருப்பு போராட்டத்தை தொடருவோம் என்று அவர்கள் கூறினர். இதன் பின்னர் அவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்ட 97 பேரை போலீஸார் கைது செய்து, தாதகாப்பட்டியில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர். செவிலியர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக ஆட்சியர் உறுதியளித்தார். ஆனால், பணி நிரந்தரம் செய்து அரசு உத்தரவு பிறப்பிக்கும் வரை, போராட்டத்தில் ஈடுபடுவோம் என செவிலியர்கள் கூறினர்.