வேலையில் சிக்கல் எனில் தொடர்புகொள்ள விரைவில் 24x7 கால் சென்டர்; வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கு அரசு சார்பில் பயிற்சி

கட்டுமானப் பணிக்கு ஆட்களை கேட்கும், மாலத்தீவு நிறுவனத்தில் ஏற்கெனவே வேலை செய்து வரும் தமிழர்களிடையே  அமைச்சர் மஸ்தான்  கருத்து கேட்டு, ஆய்வு செய்தார் (கோப்புப் படம்)
கட்டுமானப் பணிக்கு ஆட்களை கேட்கும், மாலத்தீவு நிறுவனத்தில் ஏற்கெனவே வேலை செய்து வரும் தமிழர்களிடையே அமைச்சர் மஸ்தான் கருத்து கேட்டு, ஆய்வு செய்தார் (கோப்புப் படம்)
Updated on
1 min read

விழுப்புரம்: பல்வேறு நாடுகளுக்குச் சென்றுபணி செய்யும் தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திட 2011-ம்ஆண்டு மார்ச் 1-ம் நாள் ‘வெளிநாடு வாழ் தமிழர் நலச் சட்டம்’ தமிழக அரசால் இயற்றப்பட்டது.

அதோடு, ‘புலம்பெயர் தமிழர் நலவாரியம்’ ஒன்று உருவாக்கப்பட்டு, அவர்களுக்கென நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இச்சூழலில், ‘வெளிநாடு வாழ்தமிழர்கள் நலன் குறித்த திட்டங்கள்என்னென்ன அறிவிக்கப்பட உள்ளது’என்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுகள் வாழ் தமிழர்கள் நலன்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தானிடம் கேட்ட போது, அவர் கூறியது: வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அரசிடம் முறையாக, தெளிவாகபதிவு செய்ய வேண்டும்.

வேலையில் சிக்கல் ஏற்பட்டால் அந்நாட்டின் தூதரகத்தில் உள்ள தமிழக பிரதிநிதியிடம் தெரிவிக்க 24x7 கால் சென்டர்கொண்டு வரப்படும். அங்கு, அசம்பாவிதம் ஏற்பட்டால் இதில் பதிவு செய்வதன் மூலம் வேலை செய்தவரின் நிறுவனத்திடம் உரிய இழப்பீடு பெற்றுத் தர, மேல் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் முகவர்களிடம் பேசியுள்ளோம். இனி முகவர்கள் தங்களுக்கு தேவையான பணியாட்கள் குறித்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்க வேண்டும். அப்படி அளிக்கப்படும் தகவல்கள் அடிப்படையில், சம்மந்தப்பட்ட துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, திறன் மேம்பாடு குறித்தும், வேலை செய்யப் போகும் அந்நாட்டின் சட்டங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

அயலக தமிழர்கள் வேலைவாய்ப்பு துறை மூலம் தற்போது 151 பேரை வேலைக்கு அனுப்பியுள்ளோம். அவர்களின் குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு, பணியில் உள்ளவர் நலமாக உள்ளாரா என்பதை துறை சார் அலுவலர்கள் பேசி விவரங்கள் அறிந்து வருகின்றனர். ஏதேனும் பிரச்சினை என்றால் சம்மந்தப்பட்ட நாட்டில் உள்ள நிறுவனத்திற்கு, தமிழக பிரதிநிதி பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நர்சிங் முடித்த 500 பேர் இங்கிலாந்துக்கு தேவை என்று கேட்டபோது, 481 பேர் விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில், அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு முறையே ரூ.17,800 உதவி அளிக்க அரசு ரூ. 85 லட்சம் ஒதுக்கீடு செய்தது. பயிற்சிக்குப் பின் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வேலைக்கு அனுப்புகிறோம். தேர்ச்சிபெறாதவர்கள் மீண்டும் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படுகிறது.

இதற்கான தேர்வுக்கட்டணம் ரூ.30 ஆயிரம்; இதில், 25 சதவீதத்தை அரசு ஏற்று கொள்கிறது. மாலத்தீவில், ‘கட்டுமானப் பணிக்கு ஆட்கள் தேவை’ என்று கேட்டபோது, அந்நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்தை நேரில் ஆய்வு செய்தேன். அவர்களுக்கு, ‘2 ஆயிரம் பணியார்கள் தேவை’ என்றார்கள். முதற்கட்டமாக 500 பேரை அனுப்ப உள்ளோம் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in