

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கல்வி உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட உதவிகள் கோரி 207 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்புதூர் கிராம மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதில் ‘காட்டுப்புதூரில் சுமார் 400 ஆதி திராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் காட்டுப்புதூர் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டை சுமார் 200 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். அந்தஇடத்தில் சுடுகாடு மற்றும் இடுகாடுஅமைந்துள்ளது. இந்த இடுகாட்டில் பல கல்லறைகளும் அமைந்துள்ளன.
அந்த கல்லறைகளை அகற்றி விட்டு சுடுகாட்டு நிலத்தில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அமைக்க முயற்சி நடந்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.