

இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுநிலை படிப்படியாக நகர்ந்துதற்போது தென்மேற்கு வங்கக் கடலில், இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பாபநாசம், மன்னார்குடியில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.