

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தாதது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு உயர் நீதிமன்றக் கிளையில் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களை தமிழக விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்தரப்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த கோரிக்கை வைக்கப்பட்டது.
அரசு தரப்பில் வாதிடும்போது, ‘‘பொங்கலுக்கு குறுகிய காலமே இருப்பதால் பணப்பரிசை வங்கிக் கணக்குகளில் செலுத்துவது கடினம்.மேலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை எனக் கூறி சில வங்கிகள் பணத்தை பிடித்துக் கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் மக்களுக்கு பயனில்லாமல் போய்விடும். 3 வகையான குடும்ப அட்டைகள் இருப்பதால் அவற்றை பிரிப்பதில் சிக்கல் உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், மின் இணைப்புகளுடன் ஆதார் இணைக்கும் பணியைப்போல் இப்பணியை செய்தால் என்ன? எனக் கேள்வி எழுப்பினர்.
பின்னர் பொங்கல் பரிசுத் தொகையை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த முடியுமா? என்பது குறித்து அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (ஜன.4) நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.