Published : 02 Jan 2023 07:09 PM
Last Updated : 02 Jan 2023 07:09 PM
மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையராக கடந்த மார்ச்சில் பொறுப்பேற்ற செந்தில்குமார் சட்டம், ஒழுங்கு குற்றத் தடுப்பில் தீவிரம் காட்டினார். ஏற்கெனவே அவர் சேலத்தில் பணிபுரிந்தபோது, காவல் நிலையங்களை கண்காணிக்கும் புதிய திட்டத்தை அமல்படுத்திய நிலையில், அந்த பாணியில், மதுரையிலும் மக்கள் பிரச்சினைகளுக்கான நடவடிக்கை, புகார்தாரர்களுக்கு விரைந்து தீர்வு காணும் விதமாக வீடியோ, ஆடியோ பதிவுகளுடன் கூடிய காவல் நிலையங்களை ஒருங் கிணைத்து கண்காணிக்கும் ‘ கிரேட் ’ என்ற திட்டத்தை 3 மாத்திற்கு முன்பு அமல்படுத்தினார்.
இதன் மூலம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் புகார்கள் மனுக்கள் அதிகரித்தன. ஆனாலும் விசாரணையில், திருப்தியில்லாத புகார்தாரர்களை நேரில் அழைத்து, சிறப்பு முகாம் மூலம் தீர்வு கண்டார். மக்களுக்கான காவல் துறையினர் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணிபுரியவேண்டும், சமூக வலைத்தளங்கள் வளர்ச்சியால் எது நடந்தாலும் வெளிச்சத்திற்கு வந்துவிடும், கவனமுடன் பணிபுரிய அடிக்கடி காவல் துறையினருக்கு அடிக்கடி அறிவுரைகளை தெரிவித்தார்.
அதேநேரத்தில் தவறு செய்யும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அவர் தயங்குவதில்லை. பொதுமக்களை எளிதல் அணுகக் கூடியவராக இருந்த ஆணையர் எந்தொரு சம்பவமாக இருந்தாலும், நேரில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதுபோன்ற சூழலில்தான் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக நரேந்திரன் நாயர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மதுரை நகர் தெற்கு காவல் துணை ஆணையராக பணிபுரிந்த சீனிவாச பெருமாளும் விருதுநகர் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். கடந்த 7 மாதத்திற்கு முன்பே மதுரைக்கு வந்தவர். தொழில்நுட்ப ரீதியில் குற்றச் சம்பவங்களை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டினார். கும்பகோணத்தில் டிஎஸ்பியாக இருந்தபோது, அந்நகர் முழுவதும் கேமரா கண்காணிப்பிற்குள் கொண்டு வந்தார்.
அவரது யோசனைபடி, காவல் ஆணையர் செந்தில்குமாரின் உத்தரவால் காவல் நிலைய நடவடிக்கையை கண்காணிக்கும் ‘ கிரேட் ’ திட்டம் அமலானது. மேலும், அவரது நிர்வாகத்திற்கு உட்பட மதுரை நகர் தெற்கு பகுதியிலுள்ள முக்கியச் சந்திப்பு, கோயில், சோதனைச் சாவடிகளை கேமரா கண்காணிப்பிற்குள் கொண்டு வந்துள்ளார். இத்திட்டத்தை இன்னும் முழுமையாக நிறைவேற்றிடும் முன்பே அவர் மாற்றப்பட்டுள்ளார். ஏற்கெனவே சிவகாசியில் டிஎஸ்பி பணி புரிந்தவர் என்ற அடிப்படையில், விருதுநகருக்கு அவர் மாற்றப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
மதுரை வடக்கு பகுதியில் துணை ஆணையராக இருந்த மோகன்ராஜும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். காவல் துறையில் ‘ ரேங்க்’ அடிப்படையில் பதவி உயர்வு பெற்றவர் என்றாலும், எஸ்பியாக தனி மாவட்டத்தில் பணிபுரியும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், ஒரே நேரத்தில் காவல் ஆணையர், அவருக்கு கீழ் பணிபுரிந்த 2 துணை ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டதில் அரசியல் பின்னணி இருக்குமோ என மதுரை காவல் துறையினர் மத்தியில் பேசப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT