Published : 02 Jan 2023 06:12 PM
Last Updated : 02 Jan 2023 06:12 PM

தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிதி ரூ.1,000 கோடி - அரசாணையின் முழு விவரம்

தமிழக அரசு தலைமைச் செயலகம் | கோப்புப் படம்

சென்னை: காலநிலை மாற்ற திட்டங்களுக்கு ரூ.1000 கோடி நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிதியை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்த ஆண்டு (2022-2023) நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு 1000 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிதியை அமைத்து ஆணை வெளியிட்டுள்ளது. இத்தகைய நிதி அமைப்பு முயற்சி இந்தியாவிலேயே முதன் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காலநிலை மாற்ற நிதியானது பல்வேறு, காலநிலை மாற்ற முயற்சிகள், தணிப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும். அரசு மேம்பாட்டு நிதி நிறுவனங்கள், சர்வதேச காலநிலை நிதி போன்றவற்றிலிருந்து தேவையான நிதி ஆதாரங்கள் இந்த நிதிக்கு திரட்டப்படும்.

இந்த நிதியானது தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் மூலம் 1000 கோடி ரூபாய் நிதி அளவுடன், தேவைப்படின் மற்றொரு 1000 கோடி ரூபாய்க்கு விரிவாக்கும் வாய்ப்புடன் நிர்வகிக்கப்படும். இந்த நிதிக்கு அரசு பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம் 100 கோடி ரூபாயை முதல் கட்டமாக துவக்க மூலதனமாக அளிக்கும். 10 ஆண்டு கால அவகாசத்துடன், 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும் வாய்ப்புள்ள பங்கு மூலதனங்கள், பங்குகளுடன் இணைக்கப்பட்ட இதர நிதி ஆதாரங்கள், கடனீட்டுப் பத்திரங்கள், மாற்றத்தக்க நிதி ஆதாரங்கள் மூலம் இதற்கு நிதி திரட்டப்படும்.

காலநிலைக்கு ஏற்ற பொருட்கள், மாற்றுப் பொருட்கள், மாசுக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள், புதுப்பிக்கத்தக்க, பசுமை ஆற்றல், கார்பன், பசுமை இல்ல வாயு அளவு குறைப்பு பொருளாதாரம், சுற்றுச்சூழல் சுற்றுலா, மின்வாகனம், கலப்பின வாகனம் தொடர்புடைய உள்கட்டமைப்பு, வன மேம்பாடு மற்றும் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, நிலையான விவசாயம் ஆகியவற்றிற்கு இந்நிதி முதலீட்டில் கவனம் செலுத்தப்படும். இந்த நிதியானது SEBI மாற்று முதலீட்டு நிதி விதிமுறைகள், 2012 இன் கீழ் ஒரு வகை- I (சமூக முயற்சி நிதி) ஆக அமைக்கப்பட உள்ளது.

மாநில மக்களுக்கு நிலையான மற்றும் காலநிலைக்கு ஏற்ற எதிர்காலத்தை உருவாக்க தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை தமிழக அரசு அமைத்து செயல்படுத்தி வருகிறது. மேற்படி மூன்று திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வழிநடத்த தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (Tamil Nadu Green Climate Company) என்ற சிறப்பு நோக்கு வாகனத்தையும் (Special Purpose Vehicles) தமிழ்நாடு அமைத்துள்ளது.

காலநிலை மாற்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் காலநிலை-ஆதாரமாக அடிமட்ட அளவில் வளர்ச்சித் திட்டங்களில் மாநிலத்தின் காலநிலை தாக்கங்களை ஒருங்கிணைத்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர்களை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்க இயக்குநர்களாகவும், மாவட்ட வன அலுவலர்களை மாவட்ட காலநிலை அலுவலர்களாகவும், நியமித்து மாவட்ட காலநிலை மாற்ற இயக்கங்களை அரசு அமைத்துள்ளது. தமிழகத்தை பசுமையான, தூய்மையான மற்றும் அதி மீள் தன்மையுள்ள மாநிலமாக மாற்ற தமிழக அரசு பல உத்திகளை வகுத்து வருகிறது.

இயற்கையில் வெறுமனே தணிக்கக்கூடிய திட்டங்களை உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் அதே வேளையில் தாங்குதிறன், நிலைப்புத்தன்மை மற்றும் அளவீட்டு அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான பொருளாதாரத்தின் மாற்றத்திற்கும் இது வழி வகுக்கும். நிலைத்த விவசாயம், காலநிலை மாற்ற மீள் நீர் வளங்கள், காடு மற்றும் பல்லுயிர் பெருக்கம், கடலோரப் பகுதி மேலாண்மை, பேரிடர் மேலாண்மை, மற்றும் தணிப்பு, சுகாதாரம், தொழில்நுட்பம், ஆற்றல் மாற்றம், உமிழ்வு குறைப்பு மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்நிதியை அரசு உத்தேசித்துள்ளது.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை வழிகாட்டுதலை வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசு சமீபத்தில் காலநிலை மாற்றம் குறித்த தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவினை அமைத்துள்ளது. காலநிலை தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கவும், காலநிலை மாற்றம் குறித்த தமிழ்நாடு மாநில செயல் திட்டத்திற்கு வழிகாட்டுதல் மற்றும் காலநிலை நடவடிக்கை குறித்த நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை முதல்வர் தலைமையிலான இந்த நிர்வாகக்குழு வழங்கும். அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள காலநிலை மாற்ற ஸ்டூடியோவை மீண்டும் இந்த அரசு செயல்பட வைத்துள்ளது.

காலநிலை மாற்ற இயக்கத்தின் முக்கிய முயற்சிகளாக, அலையாத்தி காடுகளுக்கான தாவர இனங்கள், பனை மரங்கள், மற்றும் பிற பொருத்தமான மர வகைகளை நடுவதன் மூலம் இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இயற்கையான அரண்கள் உருவாக்கப்படும். இது தவிர ஆசியாவின் மிகப் பெரிய சந்தையான கோயம்பேடு மொத்த சந்தை வளாகத்தை கரிம மாசு இல்லாத வளாகமாக மாற்றவும் இவ்வரசு ஆணை வெளியிட்டுள்ளது. மேலும் 25 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அவற்றை முற்றிலும் பசுமை பள்ளிகளாக மாற்றவும், 10 காலநிலை மேம்படுத்தப்பட்ட கிராமங்களை உருவாக்கவும், காலநிலை மாற்ற மீள்தன்மையுடன் கூடிய பசுமை நினைவுச் சின்னங்கள் மற்றும் முதலமைச்சரின் பசுமை புத்தாய்வுத் திட்டம் போன்ற முக்கிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x