

சென்னை: "திமுக அரசின் ஆட்சியில், தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தல் மன்னன்கள் மற்றும் தீவிரவாதிகளின் பாதுகாப்பான சொ்க்கபுரியாக இருந்து வருகிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுக அரசின் ஆட்சியில், தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தல் மன்னன்கள் மற்றும் தீவிரவாதிகளின் பாதுகாப்பான சொ்க்கபுரியாக இருந்து வருகிறது. தமிழக காவல்துறை மற்றும் உளவுத்துறை துரதிர்ஷ்டவசமாக தங்களது கடமைகளை மறந்து, கோபாலபுர குடும்பத்தின் அரசியல் எதிரிகளை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை தற்கொலைப்படைத் தாக்குதல் குறித்தும், இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் முகமது இம்ரான் இந்தியாவுக்குள் நுழைவது குறித்தும், மத்திய உளவுத்துறை தனிப்பட்ட முறையில் முன்கூட்டிய தகவல் அனுப்பியும், தமிழ்நாடு அரசின் உளவுத்துறை எதுவுமே செய்யவில்லை.
இலங்கையில் இருந்து பிணையில் வெளிவந்த முகமது இம்ரான், கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்தது பதுங்கியிருப்பது, குறித்த மத்திய உளவுத்துறை தமிழ்நாடு உளவுத்துறைக்கு அனுப்பியிருந்த அந்த குறிப்பிட்ட எச்சரிக்கை குறித்து "தி இந்து" நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. கடந்த காலங்களில் நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதுபோலவே, தமிழக முதல்வர் இந்த விவகாரத்திலும் தடுமாறியுள்ளார்.துரதிர்ஷ்டவசமாக, இந்த தகுதியற்ற திமுக அரசாங்கத்தை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்துவிட்டனர். இதனால், நிர்வாகத் திறமையற்ற திமுக அரசின் பேரழிவுகள் தொடர்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.