புயலின் போது பின்பற்ற வேண்டியதும் செய்யக் கூடாததும்

புயலின் போது பின்பற்ற வேண்டியதும் செய்யக் கூடாததும்
Updated on
1 min read

அதி தீவிர புயலான 'வார்தா' திங்கள்கிழமை பிற்பகல் சென்னைக்கு அருகில் கரையை கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்த 10 முக்கியத் தகவல்கள்.

1. கனத்த மழையின் போது வெளியே செல்லாதீர்கள். வீட்டுக்குள்ளேயே கவனமாக இருக்கவும். கதவு, ஜன்னல்களை இறுக்கமாக மூடி வைத்திருக்கவும்.

2. குழந்தைகளை வெளியே சென்று விளையாட அனுப்பாதீர்கள். தேங்கி நிற்கும் தண்ணீர் அருகிலோ, நீர்நிலைப் பகுதிகளுக்கோ அவர்கள் செல்லாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.

3. போதுமான அளவு உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்துகள் ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்துங்கள்.

4. மேல்நிலைத் தொட்டிகளில் நீரை நிரப்பி வையுங்கள். இதனால் மழையின் காரணமாக மின்சாரம் தடைப்பட்டால், தண்ணீருக்காக சிரமப்படத் தேவையிருக்காது.

5. எமர்ஜன்ஸி விளக்குகள், மொபைல் போன்களை சார்ஜ் செய்து வைத்திருங்கள். போதுமான அளவு மெழுகுவர்த்திகளும், தீப்பெட்டிகளும் அருகிலேயே இருக்கட்டும்.

6. வெள்ளம் ஏற்படுவது குறித்த வதந்திகளை நம்பாமல், அரசு அதிகாரிகளின் முறையான அறிவிப்பைக் கேட்டபிறகே வீட்டை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும்.

7. போக்குவரத்துக்காக இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட சொந்த வாகனங்களைப் பயன்படுத்தாதீர்கள்.

8. அவற்றைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்கவும்.

9. மக்கள் மழைக்கு ஒதுங்க வேண்டிய நேரத்தில் பழைய கட்டிடங்களுக்கு அடியிலோ, மரங்களுக்கு அடியிலோ நிற்பது தவறு.

10. ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களையும், வீட்டுப் பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் மழைநீர் புகாத உறையில் இட்டுப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in