பூட்டிக்கிடக்கும் மெரினா கழிப்பறைகள்: பெண்கள் கடும் அவதி

பூட்டிக்கிடக்கும் மெரினா கழிப்பறைகள்: பெண்கள் கடும் அவதி
Updated on
1 min read

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாநகராட்சி கழிப்பறைகள் தொடர்ந்து ஒரு வாரமாகப் பூட்டிக்கிடப்பதால், கடற்கரைக்கு வந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட பலர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

அதிக செலவில்லாத இடம் என்பதால் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் கடற்கரைக்கு வருவதை அதிகம் விரும்புகின்றனர். இதைத்தவிர சென்னைக்கு சுற்றுலா வரும் பயணிகள் பார்க்க ஆசைப்படும் இடமாகத் திகழ்வதும் மெரீனா கடற்கரைதான். அத்தோடு தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தைக் காணவும் அதிக அளவில் மக்கள் குவிகின்றனர்.

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பிடங்களை சென்னை மாநகராட்சி நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் ஒரு வாரமாக தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கடற்கரைக்கு வரும் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

கழிப்பறை பூட்டிக்கிடப்பதைப் பார்த்துப் பெரும்பாலான ஆண்கள் திறந்தவெளிக்குச் சென்று தங்களின் இயற்கை உபாதைகளைப் போக்கிக்கொள்கின்றனர். ஆனால் பெண்களின் பாடு, பெரும்பாடாக இருக்கிறது.

பூட்டிய நிலையில் ஆண், பெண் கழிப்பறைகள்

உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்

இதுகுறித்து மெரினா கடற்கரை பகுதிக்கான மண்டல அதிகாரி ராமமூர்த்தி கூறும்போது, "உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, கழிப்பறைகள் திறக்கப்படும்'' என்று உறுதியளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in