Published : 02 Jan 2023 04:35 AM
Last Updated : 02 Jan 2023 04:35 AM
கோவை: கார் மோதிய விபத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.31.45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கார் உரிமையாளருக்கு மோட்டார் வாகன விபத்து வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி உடுமலை சாலையில் ஆட்டோ ஒன்றில் பயணித்தபோது, எதிரே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் ஓட்டிவந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் நீதிமன்றத்தில் மாணிக்கம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 2016 ஆகஸ்ட் 8-ம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது வாரிசுகளான ஆனந்தபாலாஜி, வித்யா ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுரேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கார் ஓட்டுநரின் ஆஜாக்கிரதை, கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது. மாணிக்கத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் விபத்தால் அவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்தால் இறப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த போது மில் நடத்தி வந்த மாணிக்கம், மாதம் ரூ.55 ஆயிரம் வருவாய் ஈட்டி வந்துள்ளார்.
அவருக்கு இறப்புக்கு பிறகு, மற்றொரு நபர் மூலம் இந்த தொழிலை செய்ய முடியும் என்ற நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தை மட்டுமே வருவாயாக கருத முடியும். அதன்படி, மனுதாரர் செய்துவந்த தொழிலை மற்றொரு நபர் மூலம் செய்வதற்காக மாதம் ரூ.15 ஆயிரம் செலவாகும் என தோராயமாக நிர்ணயம் செய்யப்படுகிறது.
எனவே, சார்ந்திருப்போருக்கான இழப்பீட்டு தொகை, ஈமகிரியை செலவு, சொத்து இழப்பு, மருத்துவ செலவு, பராமரிப்பு செலவு ஆகியவற்றுக்கு இழப்பீடாக ரூ.31.45 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். விபத்து நடந்தபோது வாகனத்துக்கு உரிய தகுதிச் சான்று இல்லை. இது காப்பீட்டு விதிமுறைகளை மீறிய செயல் ஆகும்.
இருப்பினும், காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத்தொகையை செலுத்திவிட்டு, பின்னர், கார் உரிமையாளரிடமிருந்து வசூலித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT