

தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள வனப் பகுதியில் நவம்பர் 22-ம் தேதி படுக்கா என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் மீண்டும் அட்டப்பாடியில் அரசுக்கு எதிரான போஸ்டர்களை மாவோயிஸ்ட்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இது போன்ற தொடர் அச்சுறுத் தல்களால் கோவை மாவட்டத் திலும் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக - கேரள வனப் பகுதியில் மாவோயிஸ்ட் முகாம்களில் பழங்குடி மக்களை சேர்ப்பது, அடுத்தகட்ட தாக்குதலுக்கு சபதம் ஏற்பது போன்ற ரகசிய வீடியோ காட்சிகளை கேரள போலீஸார் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், 30-க்கும் மேற்பட்டவர்கள் சீருடை அணிந்து, நவீன ரக துப்பாக்கிகளுடன் வீரவணக்கம் செலுத்துவது, இயக்கப் போராட்டங்கள் குறித்து உரையாற்று வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பழங்குடி மக்கள் சிலர் புதிதாக இணைவது, அவர்களை மாவோயிஸ்ட்கள் வரவேற்பது, அனைவருமே தமிழில் முழக்கமிடுவது போன்ற காட்சிகளும் அதில் உள்ளன. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், தமிழக - கேரள வனப்பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அந்த வீடியோ காட்சி உளவுத்துறை போலீஸாரால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தையொட்டி இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம். சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின்போது கைப்பற்றப்பட்ட கணினி, செல்போன் போன்ற வற்றில் இருந்து வெளியாகி இருக்கலாம். அதில் மலைவாழ் மக்களை குறிவைத்து அவர்கள் இயங்குவது தெரிகிறது’’ என்றனர்.