நமக்கு நாமே திட்டத்தில் சென்னையில் ரூ.41 கோடியில் 416 பணிகள்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 'நமக்கு நாமே'திட்டத்தில் ரூ.41 கோடியில் 416திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசின் 'நமக்கு நாமே' திட்டத்தில் பொதுமக்கள், சமூக நலஅமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால், அரசு சார்பில் கூடுதலாக 2 பங்கு நிதி வழங்கப்பட்டு, மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நீர்நிலைகளை புனரமைத்தல் தொடர்பான பணிகளில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்தும் பணிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தை பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் வழங்க வேண்டும். இத்திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்புக்கு அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை. இத்திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி சார்பில் ஏராளமான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் `நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள அரசின் பங்களிப்பாக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.24 கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப் படையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டு, ரூ.41 கோடியே 89 லட்சத்தில் 416 திட்டப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதில் ரூ15 கோடியே 27 லட்சம் அரசின் பங்களிப்பு, ரூ.19 கோடியே 97 லட்சம் பொதுமக்கள் பங்களிப்பு என ரூ.35 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் 372 திட்டப் பணிகளை மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் குளங்களை மேம்படுத்தும் 5 பணிகள், பூங்காக்கள், விளையாட்டு திடல்களை மேம்படுத்துதல் மற்றும் செடி நடுதல் போன்ற 77 பணிகள், பள்ளிகளின் கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை மேம்படுத்தும் 118 பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்தப் பணிகளில் ரூ.29 கோடியே 91 லட்சத்தில் 344 திட்டப் பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, ரூ.12 கோடியே 58 லட்சத்தில் 234 திட்டப் பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள திட்டப்பணிகள் பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன. எனவே 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் திட்டப் பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in