

சென்னை: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஆங்கிலப் புத்தாண்டு தினமான நேற்று, சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மதிமுகவில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கிளை அமைப்புகள் அமைக்கப்படும். தொடர்ந்து செயலாளர் உள்ளிட்டபிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பின்னர் ஒன்றியம், நகரம், பேரூர், மாவட்ட ரீதியாக கட்சியின் அமைப்பு தேர்தல் 3 மாத காலம் நடைபெறும். அதன் பிறகு, தலைமைக் கழக தேர்தல் நடைபெறும்.
ஏராளமான இளைஞர்கள் மதிமுகவில் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர். மதிமுக புதிய பொலிவும், வலிமையும் பெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் வரும் 25-ம் தேதி வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் நடத்த உள்ளோம். சமூக நீதி, மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவத்துக்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஒவ்வொரு பிரச்சினையாக நாட்டில் நடந்து வருகிறது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு, பொது சிவில்சட்டம் என பாஜக அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.
பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான அரசாக திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்துகிறார். திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. கூட்டணி வலுவாக இருக்கிறது. அகதிகள் வாழும் சிறப்பு முகாமில் முதல்வர் கவனம் செலுத்தி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில்இருந்தவர்கள் விடு தலையானதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும். அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என தெரியவில்லை. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மக்களின் ஆதரவை திரட்டிய பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்கும் திட்டத்தில் ராகுல் இருக்கலாம்.
மதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்ற முறையில் துரை வைகோ தனது பணியை செய்து வருகிறார். தொண்டர்களுக்கும் அவரது பணி திருப்தியாக இருக்கிறது. அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இன்னும் வரவில்லை. தமிழகத்தில் பாஜக வளர அதிமுகதான் காரணம் என்று சொல்ல முடியாது என்றார். மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோஉள்ளிட்டோர் உடன் இருந்தனர்.