சத்துகள் நிறைந்த சுரைக்காயில் இருந்து மதிப்புகூட்டிய பொருட்கள்

சத்துகள் நிறைந்த சுரைக்காயில் இருந்து மதிப்புகூட்டிய பொருட்கள்
Updated on
1 min read

மருத்துவக் குணம் கொண்ட சுரைக்காயில் ஏராளமான சத்துகள் இருப்பதாக மதுரை மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தியா உலகளவில் காய்கறி உற்பத்தி யில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இதில் சுரைக்காய் அன்றாட சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் சுரைக்காய் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

சுரைக்காய் குக்கர்பிட் குடும்பத்தைச் சார்ந்த கொடி வகையாகும். சுரைக்காயில் நீள வகை, உருண்டை வகை மற்றும் பாட்டில் போன்ற பலவகைகள் உள்ளன. தமிழ்நாட்டில் சுரைச் செடியை ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலும், ஜனவரி முதல் ஜூன் வரையிலுமான இரண்டு பருவங்களில் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். ஒரு காயின் எடை சுமார் 700 கிராமில் இருந்து ஒன்றரை கிலோ வரையிலும் இருக்கும்.

மதுரை மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சுரைக்காய் பற்றி மேற்கொண்ட ஆய்வில் சுரைக்காயில் இருந்து மதிப்பு கூட்டிய பல்வேறு உண வுப் பொருட்களை தயாரித்து தொழில் முனை வோர், விவசாயிகள் லாபம் ஈட்டலாம் என்று யோசனை தெரிவித்துள்ளது.

அக்கல்லூரியின் மனிதவள மேம்பாட்டுத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சு. அமுதா மற்றும் அ.ரதிதேவி மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிட்டுள்ளதாவது:

சுரைக்காயில் உடலுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் உள்ளன.

நூறு கிராம் சுரைக்காயில் 96.1 கிராம் ஈரப்பதம், 0.2 கிராம் புரதம், 0.1 கிராம் கொழுப்பு, 0.5 கிராம் தாது உப்புகள், 0.6 கிராம் நார்ச்சத்துக்கள், 20 மி.கிராம் சுண்ணாம்புச்சத்து, 10 மி.கிராம் பாஸ்பரஸ், 0.7 மி.கிராம் இரும்பு, 0.03 மி.கிராம் தயமின், 0.01 மி கிராம் ரைபோ பிளேவின், 0.2 மிகிராம் நயசின் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. சுரைக்காய் உடம்புச் சூட்டை தணிக்கும். உடல் மெலிந்தவர்கள் எடை யைக் கூட்டவும், தோல் நோய் உள்ள வர்களுக்கும், இருமலை போக்கவும் உதவுகிறது.

கர்ப்பிணிகள் சுரைக்காய் பானத்துடன், தேன் சேர்த்து பருகி வந்தால் இதயம் பலப்படும். ரத்த சம்பந்தமான கோளாறுகள் மற்றும் புண்கள் குணமாகும். சுரைக்காயை பல்வேறு விதங்களில் பதப்படுத்தி பாது காக்கலாம். பதப்படுத்தப்பட்ட சுரைக்காய் நல்ல வருவாய் ஈட்டித் தரக்கூடியது. சர்க்கரை மற்றும் உப்பை பயன்படுத்தி சுரைக் காயை பதப்படுத்தலாம். இம்முறை யில் சர்க்கரையை பயன்படுத்தி டூட்டி புரூட்டி தயாரிக்கலாம். டூட்டி புரூட்டி செய்து ஐஸ்கிரிம், கேக் போன்ற உணவு வகைகளில் சுரைக்காயை பயன்படுத்தி உண்டு மகிழலாம். டூட்டி புரூட்டியை வீட்டில் செய்ய மிகக்குறைந்த செலவுதான் ஆகும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொடியில் அழகாய் காய்த்து குலுங்கும் சுரைக்காய்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in