

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் ஊர்காவல் படையைச் சேர்ந்த 1,500 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக 368 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. பைக் ரேஸைத் தடுக்க 25 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
குறிப்பாக மது போதையில் வாகனம் ஓட்டினாலோ, அதிவேகமாக வாகனங்களை இயக்கினாலோ வழக்குப் பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று (டிச.31) இரவு சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்களும், இதர விதிமீறல்களில் ஈடுபட்டதாக 572 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.