

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் வெளியே காத்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் காலை முதலே குவிந்தனர். புத்தாண்டு, பொங்கல் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் உள்ளிட்ட தினங்களில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரது வீட்டிற்கு முன் திரண்டு அவருக்கு வாழ்த்து சொல்வதும், ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து சொல்வதும் வழக்கம்.
இந்நிலையில், ஆங்கிலப்புத்தாண்டு தினமான இன்று அதிகாலை 5 மணி முதலே, ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரது வீட்டிற்கு வரத் தொடங்கினர். இந்நிலையில், தனது வீட்டினுள் இருந்தபடியே புத்தாண்டு வாழ்த்து பெற காத்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இருகரம் கூப்பி ரசிகர்களைப் பார்த்து வணங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ப்ஃளையிங் கிஸ்: புத்தாண்டு வாழ்த்து பெற வந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த், ப்ஃளையிங் கிஸ் கொடுத்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார். இது அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.