

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் காலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்த பக்தர்கள் விநாயகரை தரிசித்தனர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், கோயிலில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் புத்தாண்டு தினத்தன்று முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டனர். மார்கழி மாதம் என்பதால், ஜயப்ப பக்தர்களும் திருச்செந்தூருக்கு பெருமளவில் வருகை தருவதால், பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. அதிகாலை 1 மணிக்கு கோயிலின் நடை திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைத்திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து, வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதேபோல், சுசீந்தரம் ஆஞ்சநேயர் கோயில், ஆதிபராசக்தி கோயில், தானுமாலய சுவாமி திருக்கோயில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், உட்பட பல்வேறு திருக்கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.