

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து ஜிகேஎம் தமிழ்க்குமரன் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
பாமகவில் இளைஞர் அணித் தலைவராக ஜிகேஎம் தமிழ்க்குமரனை நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். கட்சியின் கவுரவத் தலைவரான ஜி.கே.மணியின் மகன்தான் தமிழ்க்குமரன். இந்த நியமனத்தை ராமதாஸ் தன்னிச்சையாக செய்திருப்பதாகவும், இதனால் ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
கடந்த அக்டோபர் 26-ம் தேதி வெளியான ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில், ‘ஜி.கே.மணி மகனுக்கு பாமக இளைஞர் அணித் தலைவர் பதவி: ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து வேறுபாடு’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. கட்சியின் எந்த நடவடிக்கைகளிலும் பங்கேற்காத, லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் முழுநேர தலைமை அதிகாரியாக இருக்கும் தமிழ்க்குமரனுக்கு, அதிமுக்கியத்துவம் வாய்ந்த இளைஞர் அணித் தலைவர் பதவிவழங்கப்பட்டது நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
கட்சியில் நீண்டகாலம் தலைவராக இருந்த ஜி.கே.மணியின் விசுவாசத்துக்காகவே அவரதுமகனுக்கு பதவி வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. பதவியை பெற்ற பிறகும்கூட, கட்சி நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டாமல் தமிழ்க்குமரன் இருந்ததாக கட்சியினர் தெரிவித்தனர். இந்நிலையில், பாமக இளைஞர் அணித் தலைவர் பதவியை தமிழ்க்குமரன் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து ராமதாஸுக்கு அவர் நேற்று முன்தினம் எழுதியுள்ள கடிதத்தில், ‘பாமக இளைஞர் அணித் தலைவர் பொறுப்பை தாங்களே விரும்பி எனக்கு வழங்கினீர்கள். சில சூழ்நிலை காரணமாக இப்பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.