Published : 01 Jan 2023 04:49 AM
Last Updated : 01 Jan 2023 04:49 AM
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பெயரில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அனுப்பிய கடிதத்தை, அதிமுக தலைமை அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது.
அதிமுகவில் தேர்தல் நடத்தப்பட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தொடர்பான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. பழனிசாமி பொதுக்குழுவைக் கூட்டி, கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். இது தொடர்பான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினார். அதை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை.
இந்நிலையில், பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த சூழலில், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் கருத்து தெரிவிக்குமாறு இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி என்று குறிப்பிடப்பட்டதால், அவரது தரப்பினர் உற்சாகத்தில் இருந்தனர்.
இதுதொடர்பாக, இந்திய சட்ட ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கடிதம் அனுப்பினார். அதில், அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் இருக்கின்றன. அதை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, கடிதப் போக்குவரத்துகள் இந்தப் பதவிகளின் பெயரிலேயே இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக, தேர்தல் ஆணையம் வடிவமைத்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு சில தினங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பி இருந்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்பதவிகளில் யாரும் இல்லை என்று கூறி, அக்கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் திருப்பிஅனுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT