Published : 01 Jan 2023 08:36 AM
Last Updated : 01 Jan 2023 08:36 AM
சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை 1.62 கோடி மின் நுகர்வோர், தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சிறப்பு முகாம் மூலம் 87.91 லட்சம் பேரும், ஆன்லைன் மூலம் 74.67 லட்சம் பேரும் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 77.53 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 50.93 சதவீதம் பேரும் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இதற்கான காலக்கெடு டிச. 31-ம் தேதியுடன் (நேற்று) நிறைவடையும் நிலையில், மின் நுகர்வோரின் வசதிக்காக ஜன. 31-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு நிச்சயம் காலநீட்டிப்பு செய்யப்பட மாட்டாது. தற்போது 2,811 இடங்களில் ஆதார் இணைப்புக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் நிலையில், ஜனவரி 31-ம் வரை கூடுதலாக 2,811 நடமாடும் சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், 48 மணி நேரத்துக்குள் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யப்படும்.
ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறை என்பதால் ஜன. 1-ம் தேதி (இன்று) சிறப்பு முகாம் நடைபெறாது. ஆதார் எண் இணைப்பால் 100 யூனிட் இலவச மின்சாரம் பறிபோகும் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். மின் விநியோகத்தின்போது 15 சதவீதத்துக்கு மேல் மின் இழப்பு ஏற்படுகிறது. அதைக் குறைப்பதற்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். கடந்த ஆண்டு 0.75 சதவீதம் அளவுக்கு மின் இழப்பைக் குறைத்ததால் ரூ.560 கோடி மீதமாகியுள்ளது.
வரும் ஜன.10-ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து தொழிற்சங்கத்தினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் சுமுக தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இதுவரை 40,096 இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. மீதமுள்ள இணைப்புகள் பொங்கலுக்கு முன்பாக வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். மின் வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண் இயக்குநர் ரா.மணிவண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT