

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் தில்லைகுமார் (35),குமரிபாளையத்தில் பட்டாசு குடோன் வைத்து, வியாபாரிகளுக்கு பட்டாசு மொத்த விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில், புத்தாண்டுக்கு பட்டாசு விற்பனை செய்ய வீட்டிலும் அதிக அளவில் பட்டாசுகளை வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு தில்லைகுமார் தனது மனைவி பிரியங்கா (28), மகள் சஞ்சனா (4), தாய் செல்வி (60) ஆகியோருடன் உறங்கினார். அதிகாலை 3 மணி அளவில் அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்தன. சத்தம் கேட்டு எழுந்த தில்லைகுமார் தனது மகள் சஞ்சனாவை அருகில் உள்ள தனது நண்பரிடம் கொடுத்துவிட்டு, மனைவி மற்றும் தாயுடன் சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அதற்குள் தீ வேகமாக பரவி பட்டாசுகள் வெடித்து சிதறியதோடு, வீட்டில் இருந்த 2 சமையல் எரிவாயு சிலிண்டர்களும் வெடித்து சிதறின. இதில், அவரது வீடு மற்றும் அவரது வீட்டின் அருகே இருந்த 5 வீடுகள் (குடிசை மற்றும் ஓட்டு வீடுகள்) தரைமட்டமாகின. 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. இதில், தில்லைகுமார் மற்றும் அவரது வீட்டின் அருகே வசித்து வந்த பெரியக்காள் (72) ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். பிரியங்கா, செல்வி ஆகியோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சென்ற நாமக்கல், கரூர், மோகனூர் தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.பின்னர் பொக்லைன் வாகனம் மூலம் இடிபாடுகளை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 14 பேரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற சேலம் சரக போலீஸ் டிஐஜி பிரவீன்குமார் அபிநவ், எஸ்.பி. கலைச்செல்வன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து மோகனூர் போலீஸார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமுற்றவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், “உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு வீட்டில் ஒரு டன் பட்டாசு மற்றும் நாட்டு வெடிகளை வைத்திருந்ததுதான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதை காவல்துறை எவ்வாறு அனுமதித்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்” என கூறியுள்ளார்.