Published : 01 Jan 2023 09:32 AM
Last Updated : 01 Jan 2023 09:32 AM
உதகை: உதகையிலுள்ள மத்திய மண் வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதியின்றி 370 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில், வனச்சரகர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த தீட்டுக்கல் பகுதியில் தமிழக வனத்துறைக்கு சொந்தமான 234 ஏக்கர் வனப்பகுதி உள்ளது. இதில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மையம், 1955-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில்ஒப்பந்த அடிப்படையில் இயங்குகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு கீழே விழுந்த மரங்களை அகற்றவேண்டுமென, மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய அதிகாரி கண்ணனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வனத்துறை அதிகாரியின் பரிந்துரை கடிதம் உட்பட அரசு விதிகள்படி, மரங்களை வெட்டிக் கொள்ளுமாறு பதில் அளித்துள்ளார். இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம் கண்ணன் நீண்ட விடுமுறையில் சென்றுவிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மழைக்கு கீழே விழுந்த மரங்கள் மட்டுமின்றி, காப்புக்காடு பகுதியில் இருந்த மற்ற மரங்களையும் அனுமதியின்றி வெட்டிக்கடத்தியதாக புகார் எழுந்தது. அந்த அடிப்படையில், காப்புக்காட்டில் இருந்த 370 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் வனத்துறை அதிகாரிகளும், மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய அதிகாரிகள் சிலரும், தனியார் ஒப்பந்ததாரர் ஒருவரும் ஈடுபட்டதாக புகார் கூறப்படுகிறது.
இந்நிலையில், விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு வந்த கண்ணன், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வனத்துறை அலுவலகம் மற்றும் உதகை புறநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், ரூ.48 லட்சம்மதிப்புள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டது.
இதையடுத்து, வனச்சரகர் நவீன்குமார், வனக்காப்பாளர் பாபு, வனவர் சசி, வேட்டைத்தடுப்பு காவலர் தேவேந்திரன், தற்காலிக தோட்ட பராமரிப்பாளர் நாகராஜ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவர்களை நேற்று கைது செய்தனர். பின்னர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உதகை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த வாரம் வனச்சரகர் நவீன்குமார் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வனச்சரகர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வனத்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் உதகை காந்தல் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மரம் வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவத்தில், மத்தியமண் மற்றும் நீர் வள ஆராய்ச்சிமைய அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு டேராடூனில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மைய தலைமையகத்துக்கு தமிழக வனத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய மண் மற்றும்நீர்வள ஆராய்ச்சி மைய அதிகாரிகள் சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT