Published : 01 Jan 2023 09:42 AM
Last Updated : 01 Jan 2023 09:42 AM
சென்னை: ‘தி இந்து’ குழுமத்தின் தமிழ் திசை பதிப்பகம் சார்பில் நடிகர் சிவகுமார் எழுதிய ‘திரைப்படச் சோலை ’ நூலை மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் வெளியிட்டார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நடிகரும், பன்முகக் கலைருஞமான சிவகுமார் தனது திரைப்பட அனுபவங்களை கட்டுரைகளாக எழுதினார். இவை வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. அந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முடிவு செய்தது. அதன்படி, ‘தி இந்து’ குழுமத்தின் தமிழ் திசை பதிப்பகம் சார்பில் உருவாக்கப்பட்ட ‘திரைப்படச் சோலை’ என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் தலைமை தாங்கி, சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். நூலின் முதல் பிரதியை மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் வெளியிட, இயக்குநர் தா.செ.ஞானவேல், கவிஞர் வீரபாண்டியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:
இந்து தமிழ் திசை நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன்: பன்முக கலைஞர் என்ற பெயருக்கு ஏற்ப நடிகர், எழுத்தாளர், ஓவியர் என பல்வேறு திறன்களை ஒருங்கே பெற்றவர் சிவகுமார். சிறந்த எழுத்தாளர்களை போல் சிவகுமார் எழுதியுள்ளார். மேலும், அவர் தனது வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் டைரியில் குறித்து வைத்து ஆவணப்படுத்தி வருவது ஆச்சர்யம் அளிக்கிறது.
இயக்குநர் தா.செ.ஞானவேல்: சிவகுமார் தனது திரைப்பட அனுபவங்களை அழகாக தொகுத்து இந்த நூலில் வழங்கியுள்ளார். அவரது கற்பனை திறனும், நினைவாற்றலும் அசாத்தியமானது. இந்த நூல் அனைத்து தரப்பினருக்கும் சிறந்த வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும்.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்: சிவகுமார் ஓவியராக வாழ்க்கையை தொடங்கினாலும், திரைப்படத்தில் வெற்றி பெறுவதற்கு பல்வேறு சிரமங்களை சந்தித்தார். இன்றைய இளைஞர்களுக்கு சிவகுமார் முன்னுதாரணமாக திகழ்கிறார். அவர் தனது அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த நூலை தமிழக அரசின் உதவியுடன் அனைத்து நூலகங்களுக்கும் கொண்டு செல்லும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும். அதன் மூலம் இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். நான் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் எனது சினிமா அனுபவங்களை தொடராக எழுதினேன். அது நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த நூலுக்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு இந்து தமிழ் நாளிதழ் காரணமாகும்.
கவிஞர் வீரபாண்டியன்: இந்த நூல் ஒரு கலைக் களஞ்சியமாகும். சிவகுமார் ஞானி போல் தனது வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். திரை வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும் போதே, தனக்கு போதும் என்று முடிவெடித்து நடிப்பில் இருந்து விலகிய ஒரே நடிகர் அவர் மட்டும் தான்.
நடிகர் சிவகுமார்: இந்து தமிழ் திசை நாளிதழ் என் பேனா வழி வந்த ஒரு எழுத்தைக்கூட மாற்றாமல் அப்படியே பிரசுரம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. நான் 62 ஆண்டுகளாக டைரி எழுதி கொண்டிருக்கிறேன். அதில் பல்வேறு அரிய தகவல்கள் உள்ளன. சினிமாவுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் திரைப்படச் சோலை புத்தகத்தை ஒரு முறை படித்துவிடுங்கள். வாழ்வில் பல்வேறு தோல்விகளை கடந்து முன்னேறினால்தான் வெற்றி பெற முடியும்.
நூலின் விலை ரூ.350: இந்தியாவுக்குள் புத்தகங்களை அஞ்சல்/கூரியர் மூலம் பெற ஒரு புத்தகத்துக்கு அஞ்சல் செலவு ரூ.30-ம், கூடுதல் புத்தகம் ஒவ்வொன்றுக்கும் ரூ.15-ம் சேர்த்து, KSL MEDIA LIMITED என்ற பெயரில் D.D, Money order அல்லது Cheque மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: ‘இந்து தமிழ் திசை நாளிதழ்’, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002. போன்: 044-30899000.
நூலை ஆன்லைனில் பெற: store.hindutamil.in/publications என்ற இணையதள முகவரியில் உங்கள் முகவரி மற்றும் கைபேசி எண்ணை அவசியம் குறிப்பிடுங்கள். மேலும் விவரங்களுக்கு: 7401296562 / 044 30899092
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT