

உடுமலை: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலுவை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (ஜன.2) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போராட்டக் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், "ஊழியர்களிடையே இரட்டை ஊதிய முறையை அகற்றி, அனைவருக்கும் ஒரே மாதிரியாகஅரசு ஊதிய அமைப்பின்படி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட ஒருங்கிணைப்புக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்பு சென்னையில் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு, உடுமலையை அடுத்த கிருஷ்ணாபுரத்திலுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி, நாளை (ஜன.2) முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.