

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்படாததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் சி.ஜெயக்குமார், காரைக்காலில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசும்போது, ‘‘ஜூன் மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுவிடும்’’ என்றார். ஆனால், வழங்கப்படவில்லை.
அதைத்தொடர்ந்து, டிச.14-ம் தேதி காரைக்கால் வேளாண் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ‘‘ஒரு வாரத்தில் விவசாயிகளுக்கு தொகை கிடைத்துவிடும்’’ என்றும், ‘‘நிகழாண்டு காரைக்கால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் சம்பா நெல்லை, தமிழக அரசு மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றும் தெரிவித்தார்.
ஆனால், இதுவரை காப்பீடு இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. மேலும், நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பதற்கான பூர்வாங்கப் பணிகள்கூட தொடங்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து திருமலைராயன்பட்டினம் பாசனதாரர்கள் சங்கத் தலைவர் எஸ்.எம்.தமீம், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: விவசாயிகள் ஏற்கெனவே பொருளாதார ரீதியாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய தொகையை மத்திய, மாநில அரசுகள் செலுத்திவிட்டதாகவும், ஒரு வாரத்தில் தொகை கிடைத்துவிடும் என்றும் வேளாண் அமைச்சர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார். ஆனால், இதுவரை விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2021-22-ம் ஆண்டுக்கான சம்பா, தாளடி நெற்பயிருக்கான உற்பத்தி மானியம், புதுச்சேரி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு 2 மாதங்கள் ஆகின்றன. ஆனால், காரைக்கால் விவசாயிகளுக்கு மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. இந்தத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
காரை பிரதேச விவசாயிகள் நலச் சங்க செய்தித் தொடர்பாளர் பி.ஜி.சோமு கூறியது: 2020-21-ம் ஆண்டில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்வதாக புதுச்சேரி அரசு அறிவித்தது. அதற்கான அரசாணை வெளியிடப்படாததால், நிகழாண்டும் சம்பா சாகுபடிக்கு விவசாயிகளால் கடன் பெற முடியவில்லை.
இன்சூரன்ஸ் தொகையும் கிடைக்கவில்லை. எனவே, விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் காரைக்காலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. நிகழாண்டு தமிழக அரசு மூலம் கொள்முதல் செய்ய ஏற்பாடும் செய்யப்படும் என்று கூறிய நிலையில், இதுவரை அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
ஜனவரி கடைசி வாரத்தில் அறுவடைப் பணிகள் தொடங்கிவிடும் என்பதால், விவசாயிகளை அலைக்கழிப்புக்கு உள்ளாக்காமல், குறித்த காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் 4 இடங்களில் கொள்முதல் நிலையங்களை அமைத்து, அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்.
இந்திய உணவுக் கழகத்தின் மூலம் கொள்முதல் நிலையம் திறப்பதால் விவசாயிகளுக்கு பயனில்லை என்றார். இது குறித்து வேளாண் துறை அலுவலர்கள் கூறும்போது, ‘‘காரைக்கால் மாவட்ட பொது விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள, கடந்த ஆண்டுக்கான சம்பா, தாளடி நெற்பயிருக்கான உற்பத்தி மானியத் தொகைக்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. அடுத்த வாரத்தில் வழங்கப்பட்டுவிடும்’’ என்றனர்.