

மதன் தங்கியிருந்த வீட்டில் 100 பக்கங்கள் கொண்ட முக்கிய ஆவணத்தை போலீஸார் நேற்று கைப்பற்றினர்.
‘வேந்தர் மூவிஸ்’ மதன் கடந்த மே மாதம் தலைமறைவானார். எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாகக் கூறி, 123 பேரிடம் ரூ.84 கோடியே 27 லட்சம் வசூல் செய்து, மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, ஐந்தரை மாதங்களுக்குப் பிறகு கடந்த 20-ம் தேதி இரவு திருப்பூர் ஆர்ஜி கார்டன் பகுதியில், அவரது தோழியான வர்ஷாவின் வீட்டில் மதன் கைது செய்யப்பட்டார்.
திருப்பூரில் மதன் தங்கியிருந்த வீட்டில் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். திருமுருகன்பூண்டி ஆர்ஜி கார்டன் பிளாட் எண் 6-ல் அவரது தோழி வர்ஷா வசித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன் பிளாட் எண் 15-ஐ வர்ஷா உரிமையாளரிடம் வாடகைக்கு பிடித்துள்ளார். வர்ஷா வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில்தான் மதன் தங்கியிருந்த வீடு உள்ளது. அங்கு மதன் கடந்த 2 மாதமாக தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
நேற்று பகல் 1.05 மணிக்கு ஆர்.ஜி கார்டனுக்கு மதன் மற்றும் 2 சாட்சியங்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அழைத்து வந்தனர். கூடுதல் துணை ஆணையர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் பாலசுப்பிரமணியம் தலைமையில் 12 போலீஸார் வந்தனர். வர்ஷாவின் வீட்டுக்குள் சென்ற போலீஸார், அவரிடம் இருந்த, பிளாட் எண் 15-ன் சாவியை பெற்று வீட்டைத் திறந்து, ஆய்வு செய்தனர். இதில், 100 பக்கங்கள் கொண்ட முக்கிய ஆவணத்தை போலீஸார் கைப்பற்றினர். மதனிடம், அவரது நண்பர் சேகர் பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள் குறித்தும் கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2.20 மணிக்கு, விசாரணையை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.