

தமிழக புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பதில் யுனெஸ்கோவின் பரிந்துரைகளை செயல்படுத்து வது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களாக உள்ள பழமையான கோயில்களை அவற்றின் பாரம்பரியம் கெடா மல் பாதுகாக்கவும், அவற்றுக்கு சர்வதேச அந்தஸ்து கிடைக் கவும் ஐ.நா. கல்வி, அறிவி யல், கலாச்சார அமைப்பான ‘யுனெஸ்கோ’வின் பரிந்துரை களை ஏற்று புதிதாக நிபுணர் குழு அமைக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டு இருந் தது.
உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து தொடர்ந்த இந்த வழக்கில், இந்து சமய அறநிலை யத் துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்கள், பழமையான கோயில்களை ஆகமவிதிகளின் அடிப்படையில் பாதுகாக்கவும், புனரமைக்கவும் தகுதியான நிபுணர் குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக நிபுணர் குழு அமைக்கத் தேவையில்லை’’ எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் நேரில் ஆஜராகுமாறு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் அமர்வு முன்பு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீர சண்முகமணி நேற்று நேரில் ஆஜராகி, நிபந் தனையற்ற மன்னிப்பு கோரினார்.
அப்போது நீதிபதிகள், ‘‘பழமை, பாரம்பரியம் கெடாத வகையில் தமிழக புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையிலான யுனெஸ்கோவின் பரிந்துரைகளை ஏற்க மாட்டோம் என்ற மனநிலையை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள்’’ என ஆணையரைக் கண்டித்தனர்.
பின்னர் நீதிபதிகள் தமது உத்தரவில், ‘‘இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கடந்த டிசம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்த பதில்மனுவை திரும்பப் பெறுவதாகவும், அதே சமயம் யுனெஸ்கோவின் பரிந் துரைகளை ஏற்க உள்ளதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே ஆணையர் ஏற்கெனவே தாக்கல் செய்த பதில் மனுவை மாற்றி புதிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.