Published : 31 Dec 2022 11:17 AM
Last Updated : 31 Dec 2022 11:17 AM

தமிழக அரசியல் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து 

புத்தாண்டு கொண்டாட்டம் |

சென்னை: தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: மலருகின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். புலரும் புத்தாண்டு, அனைவருக்கும் ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும். இருளும் சோகமும் விலகி இருக்க, புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோஷம், வெற்றி இவற்றையெல்லாம் இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வழங்கட்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: சமூக நீதியும், சகோதரத்துவமும் ஓங்கி ஒளிரவேண்டிய காலகட்டத்தில் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்த்திட மத்திய அரசும், இந்துத்துவா சக்திகளும், சனாதன கூட்டமும் மத்திய அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன. இவற்றை எதிர்த்துப் போராடும் அரசியல் கட்சிகளும், பொதுநலனில் அக்கறை உடையோரும், மாநில சுயாட்சியைக் காக்கவும், ஒன்றிய அரசின் அநீதியான போக்கைத் தடுக்கவும் ஆங்கிலப் புத்தாண்டு மலர்கிற இந்த நாளில் சபதம் ஏற்றுக்கொள்வோம். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் திராவிட மாடல் ஆட்சியை அண்ணா காட்டிய வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகுந்த கவனத்துடன் நடத்தி வருகிறார். இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ‘இந்தியா டுடே’ இதழ் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. மற்ற மாநிலங்களும் தமிழகத்தைப் பின்பற்றத்தக்க விதத்தில் இன்றைய திமுக அரசுக்கு நாம் துணையாக ஆதரவு அளிப்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2023-ம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கை தான் வாழ்க்கை. கடந்த சில ஆண்டுகளின் துயரங்கள் அனைத்தும் துடைத்தெறியப் படும்; அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத முன்னேற்றங்கள் எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்போம். புத்தாண்டு நமக்கு மகிழ்ச்சி, மட்டற்ற மகிழ்ச்சியை மட்டுமே அளிக்கும்.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் காணாத வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக கடந்த 8 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. 2014 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் விரோதத்தை மூடி மறைப்பதற்கு வெறுப்பு அரசியலை வளர்த்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்து வாக்கு வங்கியை விரிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற போக்கை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது.

இதனால், இந்தியாவிற்கே உரித்தான வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற பன்முகத் தன்மைக்கு மிகப்பெரிய பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய அணுகுமுறையினால் மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை முறியடிக்க ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 110 நாட்களுக்கும் மேலாக காஷ்மீரை நோக்கி இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்கு மக்களிடையே பேராதரவும், எழுச்சியும் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்து மக்கள் அரசின் நலன்சார்ந்த திட்டங்களினால் பெரும் பயனை அடைந்து வருகிறார்கள். எந்த சேதாரமும் இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைகின்றன. இதனால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கிற வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

அதேநேரத்தில், மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை காரணமாக தமிழகம் பல நிலைகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. வெள்ள நிவாரண ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, இந்தி, சமஸ்கிருத திணிப்பு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு உலை வைக்கிற நடவடிக்கைகள், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தராத போக்கு என மாநில நலன்களுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.

இத்தகைய அவலநிலைகளிலிருந்து தமிழகத்தை காப்பாற்றுகிற பொறுப்பும், கடமையும் எண்ணற்ற வெற்றிகளை குவித்து வருகிற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது. அதனை நிறைவேற்றுகிற வகையில் ஒருங்கிணைந்து ஓரணியில் திரண்டு 2024 பொதுத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை அகற்றுவதற்கு வருகிற புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும். தமிழக மக்கள்அனைவருக்கும் மனப்பூர்வமான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யப்பட்டும். புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், ஆனந்தம், வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: இனம், மதம், மொழி, நாடு ஆகியவற்றையெல்லாம் தாண்டி உலகெங்கும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டில் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நலன்களையும், தமிழகத்தின் உரிமைகளையும் காத்து நிற்பதற்கான வலிமையைப் புத்தாண்டு தந்திடட்டும். தொழில்களும், விவசாயமும் செழித்தோங்கி, எல்லா வகையிலும் சிறந்த ஆண்டாகவும் உற்சாகம் தருகிற ஆண்டாகவும் 2023 திகழட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம். அனைவருக்கும் என் வாழ்த்து.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x