பல்வேறு பொறுப்புகளுக்கு பெருமை தேடித் தந்தவர் கோ.சி.மணி: ஸ்டாலின் புகழஞ்சலி

பல்வேறு பொறுப்புகளுக்கு பெருமை தேடித் தந்தவர் கோ.சி.மணி: ஸ்டாலின் புகழஞ்சலி
Updated on
1 min read

பல்வேறு பொறுப்புகளில் இருந்து அந்த பொறுப்புகளுக்கு எல்லாம் ஒரு பெருமையை, மரியாதையை, அங்கீகாரத்தை தேடித் தந்திருக்கக்கூடியவர் கோ.சி.மணி என்று ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் மறைந்த கோ.சி.மணிக்கு திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''சோழ மண்டலத்தின் தளகர்த்தராக, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திமுகவின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கிய கோ.சி.மணியின் மறைவு திமுகவுக்கு ஈடு செய்யமுடியாத ஒரு மாபெரும் இழப்பாக அமைந்துள்ளது.

தலைவர் கருணாநிதி கிழித்த கோட்டை தாண்டாதவர்களில் முதலிடத்தில் இருக்கக்கூடிய ஒருவர் உண்டென்று சொன்னால் அது நம்முடைய கோ.சி.மணி நிச்சயமாக இருப்பார். தலைவர் கருணாநிதி உள்ளத்திலே ஆழமான, ஒரு நம்பிக்கைக்குரிய இடத்தை பெற்றவருமாக இருந்த கோ.சி.மணியின் இழப்பு தலைவர் கருணாநிதிக்கும், திமுகவும் ஒரு மாபெரும் இழப்பாக அமைந்திருக்கின்றது.

அவர் மேலவை உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, விவசாயத் துறை அமைச்சராக, கூட்டுறவுத் துறை அமைச்சராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக இப்படி பல்வேறு பொறுப்புகளில் இருந்து அந்த பொறுப்புகளுக்கு எல்லாம் ஒரு பெருமையை, மரியாதையை, அங்கீகாரத்தை தேடித் தந்திருக்கக்கூடியவர் கோ.சி.மணி.

ஒரு ஊராட்சியின் தலைவராக இருந்த அவர் அதன்பிறகு உள்ளாட்சித் துறையின் அமைச்சராக பொறுப்பேற்று உள்ளாட்சி துறை அமைச்சர் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன பணிகளை ஆற்றிட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் கோ.சி.மணி.

இன்று அவரை இழந்து வாடிக்கொண்டிருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு தலைவர் கருணாநிதியின் சார்பிலும், என்னுடைய சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்'' என ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in