

சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளதாக வும், கடந்த 4 ஆண்டுகளில் 14,551 குற்றவாளி கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூடுதல் காவல் ஆணையர் கே.சேஷசாய் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று நிருபர்களிடம் கே.சேஷசாய் கூறியதாவது:
சென்னையில் கடந்த 2012 முதல் இதுவரை பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 14,551 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், சென்னையை சேர்ந்தவர்கள் 11,303 பேர், பிற மாநிலம், மாவட்டம், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் 3,248 பேர்.
சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் குற்றங்களை முற்றிலும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, தினமும் 373 ரோந்து வாகனங்களில் போலீஸார் இரவு, பகலில் ரோந்து வருகின்றனர். முதியோர்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ரவுடிகளும் கண்டறியப்பட்டு உடனுக்குடன் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த ஜனவரி 1 முதல் கடந்த மாதம் 30ம் தேதி வரை 5 லட்சத்து 92 ஆயிரத்து 945 அழைப்புகள் வந்துள்ளன. தொடர் நடவடிக்கை காரணமாக அக்டோபர் மாதத்தை ஒப்பிடும்போது நவம்பர் மாதத்தில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கான அழைப்புகள் குறைந்துள்ளன. சென்னையில் இதுவரை 20 ஆயிரத்து 995 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 6,733 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த பொதுமக்களை வலியுறுத்தியுள்ளோம்.
பல்வேறு குற்றங்கள் தொடர்பாக கடந்த 2012 முதல் 2016 வரை சென்னையில் 14,551 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் கொலை, கொள்ளை, வழிப்பறி என 384 குற்றங்கள் நடந்துள்ளன. இதுவே நவம்பர் மாதம் 209 குற்றமாக குறைந்துள்ளது என்றார். பேட்டியின்போது துணை ஆணையர் எஸ்.மணி உடன் இருந்தார்.