Published : 02 Jul 2014 12:20 PM
Last Updated : 02 Jul 2014 12:20 PM

தமிழக மீனவர்கள் உரிமை பெற கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதே ஒரே வழி: வைகோ வலியுறுத்தல்

தமிழக மீனவர்களின் உயிருக்கும், வாழ்வாதார உரிமைக்கும் உத்தரவாதம் கிடைக்க கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதே ஒரே வழி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "கச்சத் தீவு தொடர்பான ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு, தமிழக மக்களுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் கடும் அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

'1974 இல் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இல்லை; இங்கே ஓய்வு எடுப்பதற்கும், மீன் பிடி வலைகளை உலர்த்தவும், அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கு ஏற்பதற்கு மட்டுமே கச்சத் தீவு ஒப்பந்தம் வகை செய்கிறது' என்று இந்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்தியாவில் புதிய அரசு அமைந்த பின்னரும் இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்து இலங்கைச் சிறையில் அடைப்பதும், படகு உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நீடிக்கிறது. இலங்கை அரசின் அட்டூழியத்தை நிறுத்துவதற்கு மத்திய அரசு உறுதியான, கடுமையான நிலைப்பாட்ட எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மீனவர்கள் எதிர்பார்க்கின்றபோது, கச்சத் தீவைச் சுற்றியுள்ள பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை இல்லை என்று இந்திய அரசு கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கின்றது.

ஜூன் 24, 1974 ஆம் ஆண்டில், செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் அதன் உறுப்பு 5, 'கச்சத் தீவுக்குச் செல்ல இந்திய மீனவர்களுக்கும், அங்குள்ள அந்தோணியார் கோயிலில் வழிபாடு செய்யச் செல்பவர்களுக்கும் எப்போதும் உள்ள உரிமையின் அடிப்படையில் சென்று வர உரிமை உண்டு; அதற்கான பயண ஆவணங்களோ, இலங்கையின் விசா அனுமதியோ தேவை இல்லை' என்று கூறுகிறது. இந்த உறுப்பு 5, கச்சத் தீவில் இந்திய-இலங்கை நாடுகளுக்கு கூட்டு மேலாண்மை ஆட்சி உண்டு என்ற பொருளில்தான் அமைந்து இருக்கின்றது.

1976 மார்ச் 23 அன்று இந்திய வெளியுறவுச் செயலர் கேவல்சிங் மற்றும் இலங்கை வெளியுறவுச் செயலாளர் ஜெயசிங்கே இருவரும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் இந்தியாவின் உரிமையை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து விட்டதாக இலங்கை கூறி வருகிறது. இந்திய அரசின் நிலைப்பாடும் அதுதான் என்பதை மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் உணர்த்துகிறது.

ஆனால், இந்திய - இலங்கை வெளியுறவுச் செயலாளர்களுக்கு இடையே 1976 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தம், இந்திய அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. எனவே, 1976 ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாகச் செய்து கொள்ளப் பட்டதாகக் கூறப்படும் 2ஆவது ஒப்பந்தம், தமிழக மீனவர்களை ஒருபோதும் கட்டுப்படுத்தாது.

இலங்கையைப் பொறுத்தவரை எந்த உடன்பாட்டையும் ஏற்றுக்கொண்டு அதன்படி அந்த நாடு நடந்துகொண்டது இல்லை. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், இலங்கையில் தமிழ் மக்களின் தாயகப் பகுதிகளான, வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆனால் இந்த ஒப்பந்தம் செல்லாது என்று இலங்கை உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக இரத்து செய்து விட்டது.

இரண்டு நாடுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்ட காலத்தில் உள்ள நிலைமை பின்னர் மாறுமானால், செய்து கொண்ட உடன்பாட்டையும் இரத்துச் செய்யலாம் என்று பன்னாட்டுச் சட்ட விதிகள் கூறுகின்றன.

எனவே, இந்திய அரசு தமிழக மீனவர்களின் உயிருக்கும், வாழ்வாதார உரிமைக்கும் உத்தரவாதம் கிடைப்பதற்கு, பன்னாட்டுச் சட்ட விதிகளின்படி கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து, கச்சத் தீவை மீட்பது மட்டுமே ஒரே தீர்வு என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x