Published : 04 Dec 2016 05:31 PM
Last Updated : 04 Dec 2016 05:31 PM

அரசு மருத்துவமனைகளை சீர்படுத்தி தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை தேவை: திருநாவுக்கரசர்

அரசு மருத்துவமனைகளை சீர்படுத்தி ஏழை, எளிய மக்களுக்கு தரமான, சுகாதாரமான சிகிச்சை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் அடிக்கடி உயிரிழப்புகள் நடப்பதும், பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்துவதும் வழக்கமான நிகழ்வுகளாகி விட்டன. இதனால் அரசு மருத்துவமனைகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் தருமபுரியில் 13, விழுப்புரத்தில் 8 பச்சிளம் குழந்தைகள் உரிய சிகிச்சை இல்லாமல் உயிரிழந்துள்ள கொடுமை நடந்தது. இதிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வேறு வகையில் செலவிடுவதால மருத்துவமனைகளில் சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற உபகரணங்கள் வாங்கப்படவில்லை, இதனால் ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 79 சதவீத மக்கள் அரசு மருத்துவனைக்குச் செல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டால் பல்வேறு நிர்பந்தங்கள் கொடுக்கப்படுவதாகவும், தவறான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் தலித்துகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய அரசு விருது வழங்கியிருக்கிறது. இதில் புளகாங்கிதம் அடையும் தமிழக அரசின் சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளின் அவலத்தைப் போக்க எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறது?

அரசு மருத்துவமனைகளை சீர்படுத்தி ஏழை, எளிய மக்களுக்கு தரமான, சுகாதாரமான சிகிச்சை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x