

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஜனவரி 5-ம் தேதி மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்த தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டையில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார்.
தீர்மானங்கள்
மண்டலச் செயலாளர் டிபிகே.ராஜேந்திரன் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் திருச்சி பாலு தீட்சிதர், தஞ்சை பாஸ்கரன், மணிமாறன், நாகை ராமதாஸ், தேனி செங்குட்டுவன், பரமக்குடி ஆதிமூலம், ராமநாதபுரம் மதுரைவீரன், சிவகங்கை முருகன், மதுரை அருண், சேலம் பெருமாள், சென்னை குமார், நாகப்பட்டினம் ராமதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி ரெங்கநாதன் வாழ்த்திப் பேசினார்.
கூட்டத்தில், வறட்சியால் நெல் சாகுபடியை இழந்துள்ள விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், மற்ற பயிர்களுக்கு உற்பத்தி செலவைக் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். வேலை இழந்த விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலம் தழுவிய மறியல்
மேலும், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து, நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, தற்கொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி வரும் ஜனவரி 5-ம் தேதி மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முடிவில் சங்க மாவட்டச் செயலாளர் சேரன் செந்தில்குமார் நன்றி கூறினார்.