Published : 30 Dec 2022 08:52 PM
Last Updated : 30 Dec 2022 08:52 PM

பரந்தூர் விமான நிலையம் நூறு சதவீதம் வரும்: அமைச்சர் உறுதி

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் | கோப்புப்படம்

மதுரை: "மதுரை விமான நிலையத்திற்கு, நிலம் எடுக்கும் பணி ஏறத்தாழ 99 சதவீதம் நிறைவுற்றிருக்கிறது. இதற்காக மொத்தம் 187.11 ஹெக்டேர் நிலம் எடுக்கப்படவுள்ளது. இதில் 186.31 ஹெக்டேர் அளவிலான நிலங்கள் கையகப்படுத்தும் பணி நிறைவுற்றிருக்கிறது" என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மதுரை விமான நிலையத்திற்கு, நிலம் எடுக்கும் பணி ஏறத்தாழ 99 சதவீதம் நிறைவுற்றிருக்கிறது. இதற்காக மொத்தம் 187.11 ஹெக்டேர் நிலம் எடுக்கப்படவுள்ளது. இதில் 186.31 ஹெக்டேர் அளவிலான நிலங்கள் கையகப்படுத்தும் பணி நிறைவுற்றிருக்கிறது. எஞ்சியுள்ள இடங்களை எடுப்பதற்கான முயற்சிகளை விரைவுப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

மதுரை விமான நிலையத்தைப் பொறுத்தவரை, வருவாய்த் துறையும், தொழில்துறையும் சேர்ந்துதான், நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இரண்டு துறையின் அமைச்சர்களும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தப் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். விரைவில் இந்தப் பணிகள் முடிவடையும்" என்றார்.

பரந்தூர் விமான நிலையம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பரந்தூர் விமான நிலையம் நூறு சதவீதம் வரும். சென்னையின் வளர்ச்சிக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அது அவசியம் என்பதை, முதல்வரும் புரிந்துள்ள காரணத்தால், அதை சமாதான முறையிலே, நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் தா.மோ. அன்பரசன் ஆகியோர் இணைந்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x