Published : 30 Dec 2022 07:55 PM
Last Updated : 30 Dec 2022 07:55 PM

அன்பில் மகேஸ் உடனான பேச்சு தோல்வி: இடைநிலை ஆசிரியர்களின் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ போராட்டம் நீடிப்பு

சென்னை: முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன்1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், முதல்வர் இதில் தலையிட்டு எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். எந்த மாதத்தில் இருந்து எங்களுக்கு ஊதியம் கிடைக்கும் என்று முதல்வர் வாக்குறுதி அளிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் நாங்கள் போராட்டத்தை கைவிட தயாராக உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் சார்பில் வெள்ளிக்கிழமை (டிச.30) சென்னையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியது: "நாங்கள் நிலுவைத் தொகை எதையுமே கேட்கவில்லை. இனிவரும் காலங்களிலாவது, எங்களுக்கு எப்போது இந்த ஊதியம் கிடைக்கும் என்ற வாக்குறுதியை முதல்வரிடம் இருந்து பெற்றுத்தரும்படி அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் கூறியிருக்கிறோம்.

முதல்வரிடம் பேசிவிட்டு கூறுவதாக அமைச்சர் சொல்லியிருக்கிறார். அதேபோல், முதல்வரைச் சந்திக்க ஏதாவது ஒருநாளை முடிவு செய்துவிட்டு, எங்களுக்கு தகவல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். எனவே, எங்களுடைய போராட்டம், முதல்வரை அமைச்சர் சந்தித்துவிட்டு, எங்களுக்கு கருத்து தெரிவிக்கும் வரை தொடரும். முதல்வர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x