

வேலூர் மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடல் கிராமத்தைச் சேர்ந்த வர் வெற்றிவேல் மகன் ராஜசேக ரன் (25). கட்டிடத் தொழிலாளி.
இவர், தனது நண்பர்களான அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் பாஸ்கர் (25), துளசி மகன் மூர்த்தி (24) ஆகியோருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் நேற்று காலை கட்டிட வேலைக்காக தி.மலை மாவட்டம் ஆரணி நோக்கிச் சென்றனர். வாகனத்தை மூர்த்தி ஓட்டிச் சென்றார்.
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் அருகேயுள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றனர்.
அப்போது, எதிரே தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 20 பேரை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த வேன், இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில், இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராஜசேக ரன், மூர்த்தி, பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். வேன் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த திமிரி, தாமரைப்பாக்கம், மோசூர், லாடவரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 20 தொழிலாளர்களும் படுகாயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநர் ராஜா (32) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.