Published : 30 Dec 2022 04:57 AM
Last Updated : 30 Dec 2022 04:57 AM
சென்னை: 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் வகையில் பணியாற்றுவது என்று திமுக செய்தி தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவில் உள்ள 23 அணிகள் மற்றும் 11 குழுக்களின் ஆலோசனைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து, கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, செய்தி தொடர்புதலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
இதில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் செய்தி தொடர்பு இணைச் செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற் அமைச்சர் பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், ஊடக விவாதங்களில் பங்கேற்கும் செய்தி தொடர்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
தொடர்ந்து, 2-வது முறையாக திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி அளித்ததற்காக முதல்வரைப் பாராட்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சாதனைகளை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொள்ள வும், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் அளவுக்குப் பணியாற்றுவது என்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT