

தமிழகத்தில் 'வார்தா' புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்திருக்கும் மத்தியக் குழு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் 'வார்தா' புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட கடலோர மாவட்டங்கள் மற்றும் பிற சில மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
புயலால் பாதித்த பகுதிகளையும், சேதங்களையும் ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் இன்று சென்னை வந்துள்ளனர். இவர்கள் இன்றும் நாளையும் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.
புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடும் போது அப்பகுதி வாழ் விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் சேதம் குறித்து கேட்டறிய வேண்டும். மத்தியக் குழுவினர் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டதன் அறிக்கையை மத்தியக் குழுவினர் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். அதன் மூலம் விரைவில் முழு நிவாரணத் தொகையை மத்திய அரசு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் புயல் பாதித்த பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதி வாழ் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.
எனவே மத்தியக் குழு தங்களது ஆய்வினை சரியாக, முறையாக, முழுமையாக ஆய்வு செய்து, அதனடிப்படையில் தமிழகத்துக்கான நிவாரணத் தொகை முழுமையாக கிடைத்திட வழி வகைச் செய்திட வேண்டும் என்பது தான் தமாகாவின் எதிர்பார்ப்பாகும்'' என்று வாசன் கூறியுள்ளார்.