Published : 30 Dec 2022 04:25 AM
Last Updated : 30 Dec 2022 04:25 AM
சென்னை: சென்னை மாநகரில் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ சேவை, பொழுது போக்கு போன்ற வற்றுக்காக தினமும் சுமார் 20 லட்சம் பேர் சென்னைக்குள் வந்து செல்கின்றனர். உள்ளூரைச் சேர்ந்த 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாநகருக்குள் பல்வேறு அலுவல்கள் காரணமாகச் சுற்றி வருகின்றனர்.
மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 943 இடங்களில் 7 ஆயிரத்து 590 இருக்கைவசதிகள் கொண்ட பொதுக்கழிப்பிடங்கள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன. மாநகர மக்கள் தொகை மற்றும் மாநகருக்கு வந்து செல்வோர் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, இது போதுமானதாக இல்லை என்று பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நிர்பயா திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் சில இடங்களில் கழிப்பறை மற்றும் சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டாலும், அவற்றுக்கு முறையாக தண்ணீர் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டு, மூடிக்கிடக்கின்றன. அண்மையில் `இந்து தமிழ் திசை' சார்பில் மாநகராட்சி கவனத்துக்குக் கொண்டு சென்ற பிறகே, தண்ணீர் நிரப்பப்படுகிறது. பல கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்காமல் அசுத்தமாகக் கிடக்கின்றன. எனவே அவற்றை பயன்படுத்தாமல் பலர் கழிப்பிடங்களுக்கு அருகில் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கின்றனர்.
சென்னை மாநகரில் ஏராளமானமதுக் கூடங்கள் இருந்தாலும், அவற்றுக்கு அனுமதி அளிக்கும்போதுவழங்கப்படும் நிபந்தனைகளின்படி, போதிய கழிப்பறைகள் மதுக்கூடங்களில் கட்டப்படுவதில்லை. அப்படியே கட்டினாலும், அவற்றை முறையாகப் பராமரிப்பது இல்லை. இதுபோன்ற தவறுகளை மாநகராட்சி கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதால் மாநகரின் பல்வேறு பகுதிகள் சிறுநீர் கழிப்பிடங்களாக மாறி வருகின்றன.
சென்னை வாலாஜா சாலையில் ஓமந்தூரார் மருத்துவமனை எதிரே உள்ள சாலை தேவையற்ற பொருட்களைக் கொட்டும் இடமாகவும், சிறுநீர்கழிக்கும் இடமாகவும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.
அதேபோல, வால்டாக்ஸ் சாலையில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப் பாதைக்குள் செல்லும் வழி, பிராட்வே பேருந்து நிலைய வளாகம், பெசன்ட் நகர் தேவாலயம் அருகில், வேப்பேரி ஜோதி வெங்கடாசலம் சாலை, ஜிபி சாலையில் காங்கிரஸ் அலுவலகத்தை ஒட்டியுள்ள நடைபாதை போன்ற இடங்கள் சிறுநீர் கழிப்பிடங்களாக மாறியுள்ளன. அங்கு குப்பையும், மனிதக் கழிவுகளும் கிடக்கின்றன.
இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சியின் ட்விட்டர் பக்கத்தில் காட்டப்படும் சிங்கார சென்னைக்கும், நேரடியாகப் பார்க்கும் சென்னைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகக் கூறி, மாநகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சென்னையைக் குறைத்து மதிப்பிடும் நிலை உள்ளது.
இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.36 கோடியில் 366 இடங்களில் சிதிலம் அடைந்த மற்றும் பயன்படுத்த உகந்தநிலையில் இல்லாத கழிப்பிடங்களை மறுசீரமைக்கும் பணிகளும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் புதிய பொதுக் கழிப்பிடங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதில் மேற்குறிப்பிட்ட 366 இடங்களில் 860 இருக்கைகள் கொண்டகழிப்பிடங்களும், 620 சிறுநீர் கழிப்பிடங்களும் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாநகரின் அனைத்து பகுதிகளிலும் அசுத்தமாக, சுகாதாரக்கேடு விளைவிக்கும் வகையில் உள்ள பகுதிகளை உடனடியாக தூய்மைப்படுத்த தொடர்புடைய அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT