Published : 30 Dec 2022 04:23 AM
Last Updated : 30 Dec 2022 04:23 AM
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக ரூ.72.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கொள்முதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசிகுடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் முழு கரும்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, கரும்பு கொள்முதலுக்கு நிதி ஒதுக்கியும், கொள்முதல்செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியும் நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை செயலர்ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணை:
கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய, அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு வேளாண் இணை இயக்குநர், கூட்டுறவு இணைப்பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர், வேளாண் விற்பனை துணை இயக்குநர், பொதுவிநியோக துணை பதிவாளர், மண்டல போக்குவரத்து அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் சென்னையை பொறுத்தவரை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், உணவுத்துறை உதவி ஆணையர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
மேலும், கரும்புக்கு உண்டான தொகை அதிகபட்சமாக போக்குவரத்து செலவுகள் உட்பட ஒருகரும்புக்கு ரூ.33 வீதம் , ரூ.72.38கோடி நிர்ணயிக்கப்பட்டு நிதிஒதுக்கப்பட்டுள்ளது. நியாயமான விலையில் தரமான கரும்பை பொங்கல் தொகுப்புடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இடைத்தரகர்கள், வியாபாரிகள், பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழிகாட்டுதல்கள்: பன்னீர்கரும்பை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். உயரம் 6 அடிக்கு குறையாமல், சராசரி தடிமனை விட கூடுதலாக இருக்க வேண்டும். நோய் தாக்கிய கரும்பை கொள்முதல் செய்யக்கூடாது. அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பை கொள்முதல் செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும். கொள்முதலில் சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கடந்தாண்டு வழங்கப்பட்ட கொள்முதல் விலைக்கு குறைவாக விலை நிர்ணயிக்கக்கூடாது. விலையை விவசாயிகள் வங்கிக் கணக்குக்கு ஜனவரி 13-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT