பண்டைய கல்வெட்டுகளை ஆராயும் பெண் ஆராய்ச்சியாளர்

பண்டைய கல்வெட்டுகளை ஆராயும் பெண் ஆராய்ச்சியாளர்

Published on

பண்டைய கல்வெட்டுகளை ஆராய்ந்து தமிழர்களின் நாகரிகங்களை அறிவதில் ஆர்வம் காட்டி வருகிறார் விழுப்புரத்தில் வசிக்கும் பெண் ஆராய்ச்சியாளர் மங்கையர்கரசி. பண்டைய காலத் தில் சேவலுக்கும், கோழிக்கும் நடுகல் அமைக்கப்பட்டுள்ளதை கல்வெட்டு மூலம் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

காஞ்சிபுரத்தில் பிறந்த நான், அங்கு உள்ள கோயில்களில் இருக்கும் கல்வெட்டுகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டினேன். ஆங்கில இலக்கியம் படித்ததால் கல்வெட்டு தொடர்பான கல்வியை தொடக்கத்தில் என்னால் கற்க இயலவில்லை. ஆனாலும் முயற்சியை தளர விடாமல் முயன்றேன். 1987-ம் ஆண்டு கொடுமுடி சண்முகம் அளித்த கல்வெட்டு பயிற்சியில் 63 பேர் பங்கேற்றோம். அதில் வெற்றி பெற்றது நானும், என் கணவர் வீரராகவனும் மட்டுமே.

1988-ம் ஆண்டு முதல் கல்வெட்டு ஆராய்ச்சி தொடங்கியது. கி.பி. 5-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகளைப் படித்தேன். தொடர்ந்து விழுப்புரம் அருகே அரசலாபுரத்தில் கோழிக்கு நடுகல் அமைத்த கல்வெட்டு, திருக்கோவிலூர் அருகே ஆவியூர் சேவலுக்கு நடுகல் அமைத்த கல்வெட்டு, பண்ருட்டியில் விக்கிரம சோழன் குறித்த கல்வெட்டு என 1992-ம் ஆண்டு வரை புதிதாக 12 கல்வெட்டுகளைக் கண்டறிந்து ஆவணப்படுத்தினேன்.

153 சிற்பங்கள்

மேலும் 8 பாறை ஓவியங்கள், 36 ஏரி கல்வெட்டுகள், 12 தனி கல்வெட்டுகள், 14 கோயில் கல் வெட்டுகள், துர்க்கை, அய்யனார், சப்தமாதா, விநாயகர், லகுலீஸ் வரர் என இதுவரை 153 சிற்பங் களைக் கண்டறிந்துள்ளேன். 29 நடுகல்லையும் கண்டுபிடித்துள் ளேன்.

2003-ம் ஆண்டு ஜப்பான் தொல்லியல் துறையின் சார்பில் தமிழகத்தில் பவுத்த மதத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் என்ற தலைப்பில் பேசியுள்ளேன். மேலும் ஜப்பானில் 3 மாதம் தனியாக கல்வெட்டுகளைத் தேடி அலைந்தேன். இந்திய அளவில் மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியாவின் ஒரு தீவுக்கும் சென்று கல் வெட்டுகளைத் தேடியுள்ளேன்.

தமிழ்நாடு எழுத்தாளர் சங்கம் சார்பில் பாரதி பணிச் செல்வர் என்ற விருது எனக்கு வழங்கப்பட்டது. தற்போது தஞ்சை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் கழக துணைத் தலைவராகவும், தொன்மை இயல் ஆய்வு நிறுவனத்தின் துணைச் செயலாளராகவும் உள்ளேன்.

தமிழகத்தில் 54 இடங்களில் தொல்லியல் பொருட்களைச் சேகரித்து காட்சிக்கு வைத்துள்ளேன். கல்வெட்டு ஆராய்ச்சி மூலம் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டதால் 1992-ம் ஆண்டு தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் என் மகள் உமா சங்கரி படித்து முடித்து, தற்போது மருத்துவராக பணியாற்றுகிறார்.

பத்திரிகையாளர் ஐராவதம் மகாதேவன், டிஜிபி ராஜேந்திரன், தொல்லியல் துறையில் உள்ள தர் ஆகியோர் எனக்கு எப்போதும் வழிகாட்டியாகவும், உதவிகரமாகவும் இருந்தனர் என்றார்.

மங்கையர்கரசி தன் கணவர் வீரராகவனுடன் இணைந்து விழுப்புரத்தில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in